

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெட்ரால் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்தடையை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மின் விநியோகமும் தகவல் தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டதால் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதனால் அங்கு பெட்ரோல், டீசல்விநியோகம் நிறுத்தப்பட்டு பங்க்மூடப்பட்டது. இருக்கும் பெட்ரோல் பங்க்குகளிலும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, வெள்ளம் காரணமாக சில இடங்களுக்கு லாரிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் நிலைமை சீராகி விடும் என்றனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. பல வீடுகளில் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டிகளிலும் கழிவுநீர் கலப்பால் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. கேன் குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்னும் மின்விநியோகம் தொடங்கப்படவில்லை. இதை கண்டித்து புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம்,மகாகவி பாரதி நகர் பகுதிகளில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுட்டனர். இதற்கிடையே, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தண்ணீர்குறையக்குறைய மின்இணைப்பு வழங்கப்படும். 96 சதவீதம் சகஜ நிலைக்கு வந்துள்ளது’’ என்றார்.
இதனிடையே தகவல் தொடர்புசேவைகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களை அவசர உதவிக்குக் கூட தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். சிறுசேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளைமழை வெள்ளம் சூழ்ந்ததால் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இணையதள சேவை பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிய முடியாமல் ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர். இதுகுறித்து, தொலைத் தொடர்பு அதிகாரிகளிடம் கூறும்போது, மின்விநியோகம் சீராக இல்லாததால் செல்போன் டவர்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நிலைமை சீரடையும் என்றனர்.
மக்கள் போராட்டம்: கனமழையால் சென்னை மாநகரே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக் கோரியும், மின் இணைப்பு, உணவு வழங்கக் கோரியும் சென்னையின் பல இடங்களில் நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. | வாசிக்க > சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீரை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்: அமைச்சரை பொதுமக்கள் முற்றுகை
உதயநிதியிடம் சரமாரி கேள்வி: சென்னை வேளச்சேரி பகுதியில் 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் வேதனையில் தவித்து வரும் நிலையில், ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி ஆசிரியை சராமாரியாக கேள்வி எழுப்பியதும், உடன் இருந்த அமைச்சர்கள் நடந்து கொண்டதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழு விவரம் > அமைச்சர் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட ஆசிரியை - சமூக வலைதளங்களில் வைரல்
குப்பை அகற்றும் பணி பாதிப்பு: பணியாளர்களின் பாதுகாப்பு கருதிகடந்த 4-ம் தேதி முதல் வீடுவீடாககுப்பை சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மழைநீர் வடிந்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக குப்பை அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை தெருவோரங்கள், காலி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் கொட்டி வருகின்றன. மாநகரின் பல இடங்களில் குப்பை குவியல்களாக காட்சியளிக்கின்றன. | விரிவாக வாசிக்க > வெள்ளத்தால் லாரிகளை இயக்க முடியவில்லை: சென்னையில் குப்பை அகற்றும் பணி பாதிப்பு
வாகனங்கள் பாதிப்பு: புயல், கனமழை எதிரொலியாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் வீடு, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மிதந்தன. பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்வது போல கார்கள் அடித்துச் செல்லப்படும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏராளமான இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. தற்போது சென்னையின் சில இடங்களில் தண்ணீர் வடிந்துள்ள நிலையில் கார் மற்றும் இருசக்கர வாகன மெக்கானிக்குகளை தேடி அலைந்து தங்களது வாகனங்களை பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் மெக்கானிக் கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. புயல் காரணமாக வங்கிகளுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும்பாலானோருக்கு ஊதியம் கிடைப்பதும் தாமதமாகி வருகிறது. அத்தியாவசிய தேவைக்கே பணமில்லாத நிலையில், வாகன பழுது அவர்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தினர் திணறி வருகின்றனர். இதற்கான நிவாரண நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூறும்போது, ``வெள்ளத்தில் பல வாகனங்கள் மூழ்கி சேதமடைந்துவிட்டன. அவற்றை சரி செய்ய சிஎஸ்ஆர் பதிவு செய்து இலவச முகாம்கள் நடத்தப்படும். காப்பீடு கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்படும்'' என்றார்.
பால் தட்டுப்பாடு: சென்னை மாநகரில் 2-வது நாளாக நேற்றும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் விநியோகம் செய்யப்பட்ட பாலை வாங்க, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. | வாசிக்க > சென்னையில் தொடரும் பால் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அவதி