Published : 07 Dec 2023 07:28 AM
Last Updated : 07 Dec 2023 07:28 AM
சென்னை: சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பணியாளர்களின் பாதுகாப்பு கருதிகடந்த 4-ம் தேதி முதல் வீடுவீடாககுப்பை சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மழைநீர் வடிந்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக குப்பை அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை தெருவோரங்கள், காலி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் கொட்டி வருகின்றன. மாநகரின் பல இடங்களில் குப்பை குவியல்களாக காட்சியளிக்கின்றன.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், குப்பை லாரிகளை இயக்க முடியவில்லை. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்குள் லாரிகளை கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை நிறுத்தும் நிலையங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகே, அவற்றை சீர் செய்து இயக்கமுடியும். இருப்பினும், பல்வேறுநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பணியாளர்கள் வாகனங்களுடன் வந்துள்ளனர். அவர்கள் உதவியுடன் குப்பையை அகற்றும் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.
வெள்ளம் வடிந்த பிறகு, நனைந்த கட்டில் மெத்தை, சோபா, புத்தகங்கள், துணிமணிகள் உள்ளிட்டவை கழிவாக அதிக அளவில்வர வாய்ப்புள்ளது. அவற்றை அகற்றவும் பணியாளர்கள் தயார்நிலையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே எலி, நாய், பூனை போன்றவை உயிரிழந்துள்ளன. அவற்றையும் அப்புறப்படுத்தி வருகிறோம். அப்பகுதிகளில் குப்பையை அகற்றிவிட்டு, பிளீச்சிங் பவுடர் தூவி வருகிறோம். ஒருசில தினங்களில் நிலைமை சீரடையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். சில குடியிருப்பு பகுதிகளில், ‘‘ஓரிரு வாரங்களுக்கு வீடு வீடாககுப்பைகளை பெற வரமாட்டோம். அருகில் உள்ள பொது இடங்களில் குப்பைகளை கொட்டுங்கள். மழை பாதிப்புகள் முடிந்த பிறகு,மொத்தமாக அகற்றிக் கொள்கிறோம்’’ என்று குடியிருப்புவாசிகளிடம் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT