

சென்னை: சென்னை மாநகரில் 2-வது நாளாக நேற்றும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் விநியோகம் செய்யப்பட்ட பாலை வாங்க, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய பால் பண்ணைகளில் இருந்து குறைவான அளவே நேற்றும் பால் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், சோழிங்கநல்லூர், தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி, சென்னை சூளைமேடு, வடபழனி, எம்எம்டிஏ காலனி, கோயம்பேடு, அம்பத்தூர், எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.
சில இடங்களில் ஆவின் டிலைட் பால் மட்டும் குறைந்த அளவு விற்பனை செய்யப்பட்டது. இந்த பாலை வாங்குவதற்கு மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேடவாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் விநியோகிக்கப்பட்ட பாலை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு வாக்குவாதம், கைகலப்பு சம்பவமும் அரங்கேறியது. இதற்கிடையே, பால் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, சில இடங்களில் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் பாலை அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்தனர். ரூ.30 விலை கொண்ட அரை லிட்டர் பால் ரூ.60-க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அனைத்து இடங்களிலும் சீராக பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிக்கை: இதுகுறித்து அவர் வெளியிட்டஅறிக்கை: வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், பால் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில், வாகனப் போக்குவரத்து மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக, அம்பத்தூர் பால் பண்ணையில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால், பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. போர்க்கால அடிப்படையில் அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.