Published : 26 Jan 2018 09:19 AM
Last Updated : 26 Jan 2018 09:19 AM

பஸ் பழசு… கட்டணம் மட்டும் புதுசு: அரசு போக்குவரத்து கழகங்களை 25 லட்சம் பேர் புறக்கணித்தனர் - எதிர்பார்த்த வசூல் இல்லாததால் அதிகாரிகள் குழப்பம்

பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து சுமார் 25 லட்சம் பேர் அரசு போக்குவரத்து கழகங்களைப் புறக்கணித்துள்ளனர். ரயில்கள் மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோது வதால், எதிர்பார்த்த வசூல் இல்லை என்று அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழக அரசு பஸ்களில் கடந்த 20-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதன்படி பஸ் கட்டணங்கள் 60 சதவீதம் அதிகரித்தது.

இந்த கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கூடியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல், பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள் ஆதரவு திரட்டி வருகின் றனர்.

பழைய பஸ்கள்

அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 70 சதவீத பஸ்கள் பழையதாக உள்ளன. இதனால் கூடுதல் கட்டணம் கொடுத்து பழைய பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டு, ரயில்கள், தனியார் மற்றும் ஆம்னி பஸ்களில் மக்கள் பயணம் செய்ய தொடங்கி விட்டனர். எனவே அரசு பஸ்களின் சேவையில் உடனடியாக மாற்றம் செய்யாவிட்டால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு என்பது நிரந்தரமாகி விடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு, ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து போக்குவரத்து அதிகாரி கள் கூறும்போது, “கட்டண உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர். வசூல் தொகையும் ரூ.21 கோடி வரை கிடைத்தது. கட்டண உயர்வுக்கு பிறகு சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரையில் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினசரி வசூல் ரூ.28 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையும் ஒரு கோடியே 85 லட்சமாக குறைந்து விட்டது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் ரயில், தனியார், ஆம்னி பஸ் பயணத்துக்கு மாறியிருக்கலாம்’’ என்றனர்.

மேலும் சில அதிகாரிகள் கூறும்போது, “பஸ் கட்டணம் உயரும்போதெல்லாம், பயணி கள் எண்ணிக்கை கணிசமாக குறைவது வாடிக்கையான ஒன்றுதான். அதிக கட்டணம் உயர்வு, சீசன் இல்லாதது உள்ளிட்டவை இதற்கு காரணமாகும். இது நிரந்தரமானதல்ல. அதேநேரத்தில் அரசு போக்குவரத்து கழகங்களை உடனடியாக சீரமைத்து, தரமான சேவையை வழங்காவிட்டால் வருவாய் இழப்பு என்பது நிரந்தரமாகிவிடும்’’ என்றனர்.

தனியார் பஸ்கள்

இதுதொடர்பாக ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, ‘‘ஒரே நேரத்தில் அதிகளவில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், குறிப்பிட்ட சதவீத மக்கள் ரயில், தனியார் பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். சென்னையை காட்டிலும், தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 5 ஆயிரம் தனியார் நகரப் பஸ்களில் அரசு பஸ்களை விட குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால், அதிகளவிலான மக்கள் அதில் பயணம் செய்கின்றனர். எனவே, மக்களிடம் அரசு போக்குவரத்து கழகங்கள் நம்பக தன்மையை ஏற்படுத்த உடனடி யாக புதிய பஸ்களை வாங்கி, சிறப்பான சேவையை அளிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x