Published : 06 Dec 2023 12:50 PM
Last Updated : 06 Dec 2023 12:50 PM

‘ரூ.20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் சேதம்’ - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை @ சென்னை வெள்ளம்

சென்னை: தனது ‘தேசாந்திரி’ பதிப்பகத்தின் குடோனுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் சேதமானதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “புத்தகங்களை இழந்தோம். கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின. கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம்.

நேற்று முழுவதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் முழ்கிவிட்டன. மின்சாரம் இல்லை. இணைய தொடர்பில்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயினும் அருகிலுள்ள நண்பர்கள் ஓடியோடி வந்து புத்தகங்களைக் காப்பாற்ற உறுதுணை செய்தார்கள். மழை நின்ற இன்றும் மின்சாரமில்லை. வீட்டைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது.

புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை. நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிகையோடு” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x