Published : 06 Dec 2023 07:34 AM
Last Updated : 06 Dec 2023 07:34 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்: செல்போன், இணையதள சேவை பாதிப்பு

சென்னை: புயல், அதிகனமழை காரணமாகபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக, பல துணைமின் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல், புறநகர்பகுதிகளில் சில இடங்களில் மரகிளைகள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்துள்ளன. மின்வாரியம் தரப்பில் 15 ஆயிரம்பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழைவிட்டதும் படிப்படியாக மின்விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று முன்தினம் இரவுமழை விட்ட பிறகும் நேற்று இரவுவரை பல இடங்களில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும்சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக,வீடுகளில் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் இருந்துதண்ணீர் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல், வீடுகளில் தண்ணீரை சுத்திகரிக்க ஃபில்டர்களை பொருத்தியவர்களும் மின்சாரம் இல்லாததால் அவற்றை இயக்க முடியவில்லை. இதனால், குடிக்கதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கடைகளில் தண்ணீர் கேன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஏடிஎம் மையங்கள் மூடல்: மின்சாரம் இல்லாததால் வங்கிஏடிஎம் மையங்கள், யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பலர் வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் கையில் ரொக்கமாக இல்லாததால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், மின்சாரம் இல்லாததால் ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80 சதவீதம் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையில்பல இடங்களில் இன்னும் மின்விநியோகம் தொடங்கப்படவில்லை. மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால் பல இடங்களில் செல்போன்மற்றும் இணையதள சேவை பாதிக்கப்பட்டது. இதனால், தகவல் பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவசரத்துக்குகூட உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரிய முடியாமல் தவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x