Published : 05 Dec 2023 06:22 PM
Last Updated : 05 Dec 2023 06:22 PM

சென்னை வெள்ளம்: 17 பேர் உயிரிழப்பு; அடையாறு கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு | படம்: எம்.கருணாகரன்

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரைச் சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின்(DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:

  • 04.12.2023 அன்று காலை, கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. மேற்படி நிலையத்தின் மூன்று ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாரில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர்.
  • N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர்.
  • R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமம் தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர்.
  • கோயம்பேடு பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டனர்.
  • E-1 மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள கணேசபுரம், ஸ்லேட்டர்புரம் & சண்முகா தெருவில் 225 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு நகரில் 15 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • 6 நபர்கள் (2 முதியவர்கள், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள்) மேற்கு மாம்பலம் ஶ்ரீனிவாச ஐயர் தெருவில் உள்ள மழைநீர் தேங்கிய அவர்களது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
  • S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த ராம் நகரிலிருந்து ஒரு பெண் உட்பட 8 நபர்கள் மீட்கப்பட்டு மயிலை பாலாஜி நகர் நிவாரண மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த அண்ணா நகரிலிருந்து 4 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • மெரினா கால்வாய் தெருவிலிருந்து 8 நபர்கள் மீட்கப்பட்டு, V.R.பிள்ளை தெருவில் உள்ள (D-6 அண்ணா சதுக்கம் கா.நி) சமுதாய நலக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னை சத்யா நகரிலிருந்து 250 நபர்கள் மீட்கப்பட்டு, செயின்ட் சேவியர் பள்ளிக்கூட நிவராண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • ஈச்சங்காடு சந்திப்பில் கனமழையில் சிக்கிக்கொண்ட மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 22 பயணிகள் மீட்கப்பட்டு, கீழ்க்கட்டளையில் உள்ள பல்லாவரம் நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
  • J-8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்தேல் நகரிலிருந்து 60 நபர்கள் மீட்கப்பட்டு, VGP பிலோமினா பள்ளி, அரசு புயல் கட்டிடம் மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்குப்பத்திலிருந்து 50 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • H-6 ஆர்.கே.நகர் காவல் எல்லைக்குட்பட்ட நேரு நகரிலிருந்து 30 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குட்பட்ட OVM தெருவில் உள்ள சிதிலமடைந்த வீடுகளிலிருந்து இரண்டு குடும்பத்தினர் மீட்கப்பட்டனர்.
  • 67 மரங்கள் அகற்றப்பட்டது நீங்கலாக, வேப்பேரி தானா தெரு மற்றும் பெரவள்ளூர் அகர்வால் கண் மருத்துவமனை அருகில் விழுந்த மரங்கள் (2) மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினரால் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டன.

நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்: கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, C.B. சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, கோயம்பேடு, புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை

சென்னை பெருநகரில் 69 இடங்களில், சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பதிவாகியுள்ள இறப்புகள்: 17 - இறந்தவர்களின் விவரம்:

  • H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் பிரேதம் கைப்பற்றப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோன் ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பத்மநாபன் (ஆ/50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பிரேதம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகரில் முருகன் (ஆ/35) என்பவர் மீது மரம் விழுந்ததால் உயிரிழந்தார்.
  • E-5 பட்டினப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகில் இறந்து கிடந்த பெயர், விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபரின் பிரேதம் கைப்பற்றப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியன் நகர், செல்வ விநாயகர் கோயில் தெருவில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன் (ஆ/70) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரத் (ஆ/53 வயது) என்பவர், நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவில் (D-5 மெரினா கா.நி) சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்தார்.
  • சூளைமேடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றி வந்த செல்வம் (ஆ/50) என்பவர் பள்ளி வளாகத்திற்குள் இருந்த மழைநீரில் இறந்த நிலையில் காணப்பட்டார். பிரேதம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • கோட்டூர்புரம் மாநகராட்சி பள்ளி நிவாரண மையத்தில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிராஜுல் இஸ்லாம் (ஆ/19) என்பவர் இன்று (05.12.2023) 0200 மணியளவில் வலிப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
  • பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தாமோதரன் (ஆ/40) என்பவர் தனது வீட்டில் தேங்கியிருந்த மழை நீரில் இறந்து காணப்பட்டார்.
  • 05.12.2023 அன்று 0700 மணிக்கு, உடல்நலமின்றி படுக்கையிலிருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பெருமாள் (64 வயது) என்பவர், அவரது வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
  • 05.12.2023 அன்று முற்பகல், G5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் எல்லைக்குட்பட்ட அஸ்பிரின் கார்டன் அருகே தேங்கிய மழைநீரில் K-7 ICF காவல் நிலைய தலைமைக் காவலர் 24784 ருக்மாங்கதன் (48 வயது - 2002 பேட்ச்) என்பவர் இறந்துகிடந்தார். போலீசார் சம்பவிடத்திற்குச் சென்று, அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • 05.12.2023 அன்று முற்பகல், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர், R-4 பாண்டி பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாபாதர் தெருவில் உள்ள RSP டீ கடை அருகில் இறந்து கிடந்தார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • 15.12.20223 அன்று முற்பகல், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது பிரேதம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
  • மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு (85 வயது – ஓய்வு பெற்ற காவல் போக்குவரத்து ஆய்வாளர்) என்பவர் அவரது வீட்டில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
  • மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
  • ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாபு (53 வயது) என்பவர், அவரது வீட்டில் தனியாக இருந்தபோது வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
  • 04.12.2023 அன்று, பிராட்வே BRN கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (35 வயது) என்பவர் மீது பிரகாசம் சாலை & சாலை விநாயகர் கோவில் சந்திப்பு அருகே, மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இவர் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரில், மரம் விழுந்து காயமடைந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ், வ/43, த/பெ.பெருமாள் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  • திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முருகன் (37 வயது) என்பவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
  • B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த 72 வயது பெண்மணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • பிரசவ வலியிலிருந்த கொளத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • நான்கு கர்ப்பிணிப் பெண்கள் புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மீட்கப்பட்டு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • பிரசவ வலியிலிருந்த கர்ப்பிணிப் பெண் அயனாவரத்திலிருந்து மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • G-1 வேப்பேரி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் காவலர் 60683 ராஜசேகர் ஆகியோர் EVK சம்பத் சாலை-EVR சாலை சந்திப்பில் பணியிலிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில், மேற்படி காவலர் ராஜசேகர் மயங்கி விழுந்தார். உடனடியாக, இவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அப்பலோ பர்ஸ்மெட் மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • R-6 குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தெருவில், படுக்கையில் இருந்த புற்று நோயாளி மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
  • கட்டுமானப் பணி ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மதுனுமுர்மு என்பவர், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியது. உடனடியாக, இவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • கொடுங்கையூரைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ரமேஷ் என்பவர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியே பணிக்கு வந்துகொண்டிருந்தபோது, அவர் மீது ஒரு மரம் விழுந்ததில், தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இவர் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு: அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகர காவல்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள்: துணை ஆணையர்கள் ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனம் ஆகியோர்கள் தலைமையில் மூன்று தனிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் சென்னைபெருநகர காவல் எல்லையில் உள்ள காவலர் குடியிருப்புகளுக்குச் சென்று அங்கு மழை நீர் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்தியும், மேலும் அவர்களுக்கு வேண்டிய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x