Published : 04 Dec 2023 09:07 PM
Last Updated : 04 Dec 2023 09:07 PM

“எல்லா இடங்களிலும் தண்ணீர்; கேவலமான விஷயம்” - நடிகர் விஷால் காட்டம் 

சென்னை: “என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன்” என நடிகர் விஷால் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில், “வணக்கம். புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015-ம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.

8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.

என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x