Published : 04 Dec 2023 06:53 PM
Last Updated : 04 Dec 2023 06:53 PM

மிக்ஜாம் புயல் | சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், "கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாத்திட உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.

சென்னைப் பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சென்னையில் கழிவுநீரை அகற்றுவதற்காக 325 கழிவுநீர் அகற்றும் மோட்டார்கள், 546 சூப்பர் சக்கர் (Super Sucker) இயந்திரங்கள், அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தூர் வாருவதற்காக 540 வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்யும் வகையில் 44 இலட்சம் குளோரிநேட் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கனமழையால் வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்காக 272 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 8 தானியங்கி உயர்நிலை மரங்களை அறுக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மழைநீரை அகற்றுவதற்காக 990 பல்வேறு திறன் கொண்ட மோட்டார் பம்புகளும், கால்வாய்களில் தூர்வார 2 ஆம்பிபியன் வாகனங்கள், 4 ரோபாட்டிக் எக்ஸ்வேட்டர்கள் மற்றும் 3 மினி ஆம்பிபியன் வாகனங்கள பணியில் உள்ளன.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், மிக அத்தியாவசியச் சூழ்நிலை காரணமாக வெளியில் வரநேரிட்டால் மின்சார கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும், மரங்களின் கீழ் நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கனமழை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 101 நடமாடும் மருத்துவ குழுக்களும், 169 நிவாரண மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 318 மருத்துவ அலுவலர்களும், 635 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x