“இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி” - விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா தகவல்

“இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி” - விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா தகவல்
Updated on
1 min read

சென்னை: “விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “2 தினங்களுக்கு முன்பு நான் இதே போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டேன். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அதில் கேட்டுக்கொண்டேன். ஆனாலும், தொடர்ந்து, ட்ரக்யாஸ்டமி செய்யப்பட்டதாகவும், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டதாகவும், செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை சந்தித்து, எனக்கு ஆறுதல் கூறியதாகவும் தொடர்ந்து பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்களும், சேனல்களும் பரப்பி வருகின்றன.

இந்த வதந்திகள் ஒட்டுமொத்தமாக கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், எங்கள் குடும்பத்தார், உறவினர்கள், திரையுலகினர் என பலரையும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. இங்கே நாங்கள் விஜயகாந்துடன் அமைதியாக மருத்துவமனையில் இருக்கிறோம். ஆனால், இந்த பரபரப்பும் வதந்தியும் வெளியில் உலாவி வருகிறது. மனிதநேயத்துடன் தயவு செய்து வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகுவிரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார். வீண் வதந்திகளையும், பரபரப்புகளையும் யாரும் நம்பாதீர்கள். இன்று நானும் எனது இரண்டாவது மகன் சண்முக பாண்டியனும் விஜயகாந்தை சந்தித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறோம். யாரும் வதந்திகளையும், பொய்செய்திகளையும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in