Published : 01 Dec 2023 04:31 PM
Last Updated : 01 Dec 2023 04:31 PM

சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் - நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவினர் குழந்தைகள் திருமணங்கள் நடத்துவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா தாக்கல் செய்த மனுவில், "குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. 1929-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சட்டங்களை பொருட்படுத்தாமல் சிதம்பரம் பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கின்றனர். இந்த குழந்தை திருமணங்களைத் தடுக்க இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சஃபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு கோயில் விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார். அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தை திருமணம் குறித்து ஏற்கெனவே பெறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கில் எதிர்மனுதாரராக பொது தீட்சிதர்களை சேர்க்கவும் மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x