Published : 01 Dec 2023 08:02 AM
Last Updated : 01 Dec 2023 08:02 AM

சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் 2 பேர் உயிரிழந்தனர். முதல்வர், அமைச்சர்கள், மேயர், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் மாநகரின் பல்வேறு இடங்களில் பணிகளை ஆய்வு செய்தனர்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப்பகுதி காரணமாக புதன்கிழமைஇரவு வரை சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால் மாநகரில் 192 இடங்களில்மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரைவடிக்கும் பணிகளில் பணியாளர்கள் 23 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா,மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் புதன்கிழமை இரவு முதல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, மழைநீரை வடியச் செய்யும்பணிகளைத் துரிதப்படுத்தினர். மழைநீர்அதிக அளவில் தேங்கிய மேற்கு மாம்பலம் பகுதியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார். அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்.

தொடர் மழையால் மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தேங்கிய நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியை ஒட்டிய திரு.வி.க. 3-வது தெரு, திருவீதியம்மன் கோயில் தெருக்களில் மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்களை வெளியில் கொண்டுவர முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

தியாகராயநகர் பகுதியில் பாண்டிபஜார் சிவஞானம் சாலை, பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகியவணிக பகுதிகளிலும் மழைநீர் தேங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் சுமார் 3 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கியது. மழைநீர் தேங்கியதால் ரங்கராஜபுரம் சுரங்கப் பாலம் மூடப்பட்டது.

வேளச்சேரி விஜயா நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்தது. இதேபோல் அடையார், திருவான்மியூர் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

சென்னையில் அதிக மழை பதிவான கொளத்தூர் பகுதியில் ஜிகேஎம் காலனி,தெற்கு பூம்புகார் காமராஜ் தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர். இதையடுத்து, மாநகராட்சி பணியாளர்கள் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்கு மாம்பலத்தில் எல்லையம்மன் கோயில் தெரு, சம்பங்கி தெரு, பிருந்தாவன் தெருவில் ஒன்றரை அடிஅளவுக்கு மழைநீர் தேங்கியது.

மடிப்பாக்கத்தில் சபரி சாலை, பாரத் நகர், மேடவாக்கம் பிரதான சாலை, கீழ்கட்டளை பிருந்தாவன் நகர் போன்ற முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூவரசம்பேட்டை ஏரி நிரம்பி உபரிநீர் குடியிருப்புக்குள் புகுந்தது.

பருவத் தேர்வுகள் தள்ளிவைப்பு: தொடர் கனமழை காரணமாக மாணவர்களுக்கு நேற்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகளைச் சென்னை பல்கலைக்கழகம் தள்ளிவைத்தது.

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. கொரட்டூர் பகுதியில் பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.

நேற்று குறிப்பிடும்படியாக மழை பெய்யாத நிலையில், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது. இதர பகுதிகளில் தொடர்ந்து வடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2 பேர் உயிரிழப்பு: சென்னை புது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (23), நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாகக் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். தியாகராயநகர் வாணி மஹால் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மின்விளக்கு கம்பத்தின் அருகே, மின்சாரம் தாக்கி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இசாசுல் (19) உயிரிழந்தார்.

சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நேற்று ரிப்பன் மாளிகைக்கு வந்தார். அங்குக் கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தவர்களிடம் அவரே பேசி குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

இதுபற்றி முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவில், “கடந்த 2 வாரங்களுக்கும்மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் தண்ணீர் தேங்காமலிருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்பான புகார்களுக்கு சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்ஸ்-அப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x