Last Updated : 29 Nov, 2023 06:50 PM

 

Published : 29 Nov 2023 06:50 PM
Last Updated : 29 Nov 2023 06:50 PM

விக்கிரவாண்டி அருகே ‘போக்சோ’வில் கைதான ஆசிரியரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள், மாணவர்கள் முற்றுகை

ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி முன்பு திரண்டு கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியரை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்கூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கருணாகரன் (32). இந்தப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியையாக புஷ்பராணி மற்றும் ஆசிரியைகள் ராதிகா, திலகா, விஜயலட்சுமி ஆகியோர் பணி புரிகின்றனர். கருணாகரனுக்கும் தலைமை ஆசிரியைக்கும் ஏற்பட்ட ஈகோ பிரச்சினையால் சக ஆசிரியைகளுடன் சேர்ந்து பொதுமக்கள் சார்பில் கார்த்திகேயன் என்பவர் மூலம், கருணாகரனுக்கு எதிராக ஆட்சியரிடம் தொலைபேசியில் போலியாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், செவ்வாய்க்கிழமை இரவு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்துறை அலுவலர் நெப்போலியன் புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கருணாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இத்தகவல் அறிந்த வாக்கூர் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் புதன்கிழமை காலை பள்ளிக்கு முன்பு திரண்டு பள்ளியை புறக்கணித்து ஆசிரியர் கருணாகரன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், அவரை விடுவிக்க கோரியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்தவுடன் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களும் பள்ளிக்குச் சென்றனர்.பின்னர், இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், வட்டார கல்வி அலுவலர் ஜெயசங்கர் ஆகியோர் பள்ளி ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, "அப்பள்ளியில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு அணிகள் செயல்பட்டதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட கருணாகரன் குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர். மாணவர்களின் பிறந்தநாளை பள்ளியிலேயே கொண்டாடுபவர். நன்றாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x