Last Updated : 28 Nov, 2023 01:39 PM

 

Published : 28 Nov 2023 01:39 PM
Last Updated : 28 Nov 2023 01:39 PM

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் பொதுமக்கள்

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் போக்குவரத்து முறையாக ஒழுங்கமைக்கப்படாததால் நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவில் தினம்தோறும் ஏற்படும் போக்குவரத்து சிக்கலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கூடுதல் போக்குவரத்து போலீஸாரை பணியில் அமர்த்தி, போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், தினமும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து 2.50 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாக சேலம் மாநகராட்சி விளங்கி வருகிறது.

சேலம் மாநகரின் முக்கிய புறவழிச் சாலைகளில் ஒன்றாக உள்ள சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவை தினமும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர, கன ரக வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. பெங்களூரு, கோவையில் இருந்து சென்னை, திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவை கடந்து தான் சென்றாக வேண்டும். இதுபோன்ற சூழலில், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ளனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்: சேலம் நகர பகுதியில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, மல்லூர், ராசிபுரம், நாமக்கல், திருச்சி பகுதிகளுக்கும், ஈரோடு, கோவை மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவை கடந்து சென்று வருகின்றன. சேலம் மாநகர வாகனங்களும், வெளிமாவட்டம் சென்று வரும் வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. மேலும், சேலம் மாநகரில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இச்சாலையில் அதிகளவு இயக்கப்படுகிறது.

இதனால், காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நான்கு புறங்களில் இருந்தும் வாகனங்கள் கடந்து செல்லும் பகுதியாக சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானா விளங்குவதால், தினமும் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கூடுதல் போக்குவரத்து போலீஸாரை பணியில் அமர்த்தி, போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய பாலம் வேண்டும்: இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலை தீர்க்க வேண்டுமெனில் தாதகாப்பட்டி சாலையில் இருந்து நாமக்கல் பிரதான சாலையை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும். என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் மாநகரம் முழுவதும் அதிகப்படியான பாலங்கள் கட்டப்பட்ட நிலையில், மிகவும் தேவைப்படக்கூடிய சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானா பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்வில்லை. எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வு காண இப்பகுதியில் கூடுதலாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக ரவுண்டானா பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீஸாரை பணியமர்த்தி நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x