Published : 28 Nov 2023 03:38 PM
Last Updated : 28 Nov 2023 03:38 PM

கடந்த 42 ஆண்டுகளாக ரூ.7 கோடி மதிப்பிலான திருப்பூர் மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிப்பு!

காலியாக உள்ள இடத்தின் ஒரு பகுதி.

திருப்பூர்: ‘அரசு நிலத்தை அபகரிப்பது திருட்டுதான். ஆக்கிரமிப்பாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சொத்துகளை பாதுகாப்பதில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் கவனக்குறைவாக செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு நிலங்களை அபகரிக்கும் நோக்கில் ஆக்கிரமிப்பாளர்களால் திட்டமிட்டு மோசடி ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன' என்று, கடந்த வாரம் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரை கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது. வழக்கு ஒன்றில் நீதிபதிகள் கூறியதை தான் நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருகிறோம் என்கின்றனர், திருப்பூர் வடக்கு நாராயணசாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் அவிநாசி சாலை ஆஷர் மில் காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் காந்தி நகர் நாராயணசாமி நகரில், கடந்த 1981-ம் ஆண்டு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அப்போது, திருப்பூர் வடக்கு நாராயணசாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் 28.66 சென்ட் பரப்பளவு உள்ள பொது உபயோக ரிசர்வ் சைட் இடத்தை பூங்கா பயன்பாட்டுக்காக மாநகராட்சிக்கு ஒப்படைத்தனர். ஆனால், இன்றுவரை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது இந்த நிலம். ஏறத்தாழ 42 ஆண்டுகளாக நடைபெறும் போராட்டத்தை நினைவு கூறுகின்றனர், திருப்பூர் வடக்கு நாராயணசாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்.

தனியார் ஆக்கிரமித்துள்ள இடத்தில் திருப்பூர் மாநகராட்சி சார்பில்
வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை .

இதுதொடர்பாக அவர்கள் கூறிய தாவது: எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறோம். எங்கள் நலச்சங்கத்துக்காக பூங்கா அமைக்க, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலம், தனியார் கைக்கு சென்று பல ஆண்டுகளாகிவிட்டன. சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள 28.66 சென்ட் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து, கட்டிடங்கள் எழுப்பி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டு மாதந்தோறும் சம்பாதித்து வருகிறார். இன்றைக்கு அந்த நிலம் அவருக்கு சொந்தமானது இல்லை. பட்டா முறைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பி உள்வாடகைக்கு விட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டு, நிலம் ஆக்கிரமிப்பை உறுதி செய்து, எச்சரிக்கை பலகை வைத்துவிட்டு சென்றனர். அதன்பின்னர் இன்றைக்கு ஆக்கிரமிப்பு கட்டிடம் உள்ள இடத்தின் பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சொத்துவரி, குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. இதனால் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. திருப்பூரை பொறுத்தவரை நிலம் என்பது அள்ள, அள்ள குறையாத தங்கத்தில் முதலீடு செய்வது என்பார்கள். ஆனால், இங்கு அரசின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று தெரிந்தும், மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் இருப்பது அதிருப்தியாக உள்ளது.

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கட்டிடம் .

தவறான முறையில் கிரையம் பெற்ற பொதுச்சொத்துகளை உரிமை கொண்டாட முடியாது. ஆனால், காலம் கடந்தும் தொடரும் தாமதத்தால் ஆக்கிரமிப்பாளர் தொடர்ந்து இன்றைய தேதி வரை அனுபவித்து வருகிறார். கடந்த 42 ஆண்டுகளாக ஆமை வேகத்தில்கூட நகராத நிர்வாகம் மற்றும் அலுவலர்களால் அரசின் சொத்து தனியாருக்கு தங்க முட்டையிடும் வாத்தாகவே இருக்கிறது. அந்த நிலம் கிடைத்தால் பூங்கா மற்றும் கட்டிடம் உள்ள இடத்தை நூலகமாக்கி, இந்த பகுதி தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பயனுள்ள இடமாக மாற்றுவோம். இதற்கு மாநகராட்சி தான் முனைப்பு காட்ட வேண்டும். மாநகராட்சி மனது வைத்தால்தான், கண் முன்னே உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இதுதொடர்பாக மாநகராட்சி உயர் அலுவலர்களுடன் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலவரப்படி மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் கட்டிடத்தின் சொத்து வரி நீக்கம் தொடர்பான பணிகள், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன” என்றனர். கடந்த 42 ஆண்டுகளாக ஆமை வேகத்தில்கூட நகராத நிர்வாகம் மற்றும் அலுவலர்களால் அரசின் சொத்து தனியாருக்கு தங்க முட்டையிடும் வாத்தாகவே இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x