Published : 28 Nov 2023 02:27 PM
Last Updated : 28 Nov 2023 02:27 PM

தி.மலை தீபத் திருவிழாவில் இலவச பேருந்து சேவை வழக்கம்போல் துண்டிப்பு: உத்தரவை மீறியது யார்?

திருவண்ணாமலை அடுத்த ஏந்தலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை மினி பேருந்துகள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட இலவச பேருந்து சேவை திடீரென துண்டிக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, நகரைச் சுற்றி சுமார் 14 கி.மீ., தொலைவுக்கு 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்து, கோயில் அருகே வருவதற்கு 31 மினி பேருந்துகள், 24 பேருந்துகள் மற்றும் 125 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 180 இலவச பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்தார். இதற்காக, சென்னையில் இருந்து மினி பேருந்துகள் (எம்டிசி) வரவழைக்கபபட்டன.

வெளியூர்களில் இருந்து இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. ஆட்சியரின் அறிவிப்புப்படி, காலை முதல் இலவச பேருந்து சேவை தொடங்கியது. இதில், தற்காலிக பேருந்து நிலையங்களில் இறக்கிவிடப்பட்ட பக்தர்கள் இலவசமாக பயணித்தனர். மாவட்ட நிர்வாகத்தின், இச் சேவையை பாராட்டி மகிழ்ந்தனர். இந்த மகிழ்ச்சி முழுமையாக நீட்டிக்கவில்லை. இலவச பேருந்து சேவை என்பது நண்பகல் 12 மணி முதல் படிப்படியாக குறைய தொடங்கியது.

மாலை 4 மணிக்கு பிறகு இலவச பேருந்து சேவை முடிவுக்கு வரும் நிலையை எட்டியது. இதனால், தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கோயில் அருகே வருவதற்கு ஆட்டோக்களில் பக்தர்கள் பயணித்தனர். ஆட்டோ ஓட்டுநர்களும், காலையில் விடுபட்ட ‘வரவை’ மாலையில் சேர்த்து பெறத் தொடங்கினர். குறைந்த பட்ச கட்டணம் 30 ரூபாய் மட்டும் வசூலிக்க வேண்டும் என்ற ஆட்சியரின் உத்தரவை மீறி, 50 ரூபாய் மற்றும் அதற்கும் கூடுதலாக வசூலித்தனர். ஒரு ஆட்டோவில் 15 பயணிகள் வரை ஏற்றிச்சென்றனர். இதனால், பெரும் பாலான பக்தர்கள் நடந்தே சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இயக்கப்படும் இலவச பேருந்து சேவை என்பது பிற்பகல் 2 மணிக்கு பிறகு முடிவுக்கு வந்து விடுவது வாடிக்கையாகிவிட்டது. இதுதொடர்பாக ஆய்வு கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பா.முருகேஷ், காவல்துறையின் நடவடிக்கையால் இலவச பேருந்து சேவை கடந்தாண்டு நிறுத்தப் பட்டுவிட்டது. இந்தாண்டு தடையின்றி இயக்கப்படும் என அறிவித்தார். 90 சதவீதம் ஏழை மற்றும் நடுத்தர பக்தர்கள் வருவதால், ஆட்சியரின் உத்தரவை காவல்துறையினர் செயல்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இலவச பேருந்து சேவையில் பாதிப்பு இருக்கக் கூடாது என அமைச்சர் எ.வ.வேலுவும் அறிவுறுத்தினார். தற்காலிக பேருந்து நிலையங்களை ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பக்தர்களின் நலன் கருதி தடையின்றி இலவச பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தார். ஆட்சியர், போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் 2 அமைச்சர்களின் அறிவிப்பை காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது. அவர்களின் உத்தரவை மீறியது ஏன்? யார்?. இதனால், ஆட்டோ வில் பயணிக்க வேண்டிய கட்டாயம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, "திருவண்ணாமலைக்கு வரும்போது பேருந்து கட்டணத்தை விட, ஆட்டோ கட்டணம் பல மடங்கு அதிகம் உள்ளது. தொலைதூரத்தில் பேருந்து நிறுத்தி விடுவதால், ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இலவச பேருந்து சேவை உள்ளது என ஆட்சியர், அமைச்சர்கள் அறிவித் ததால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், இங்கு வந்தால் இலவச பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒரு குடும்பத்தில் 4 பேர் வந்தால் ஆட்டோவுக்கு மட்டும் ரூ.500 வரை செலவு செய்யும் நிலை உள்ளது. இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவான செயல் திருவண்ணாமலையில் தொடர் கிறது.

இதற்கு, காவல் மற்றும் வட்டார போக்குவரத்துத் துறையின் ஆதரவும் உள்ளன. அதிக பயணிகள் ஏற்றிச் சென்றது மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்ததை இவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்பதை முழுமையாக செயல்படுத்த வேண்டும், இல்லை என்றால், அறிவிக்கக்கூடாது. நாங்களும் பக்தர்களுக்காக செய்து கொடுக்கிறோம் என அறிவித்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்ளக்கூடாது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x