Published : 24 Jan 2018 07:39 PM
Last Updated : 24 Jan 2018 07:39 PM

தீக்குளித்த கால் டாக்ஸி ஓட்டுநரை சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல்: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என உறுதி

 போலீஸார் தாக்கி தரக்குறைவாக பேசியதால் தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கால் டாக்ஸி ஓட்டுநர் மணிகண்டனை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை தரமணி நெடுஞ்சாலையில் கால் டாக்ஸி வாகனத்தை மறித்த போலீஸார், வாகன ஓட்டுநர் மணிகண்டன் சீட் பெல்ட் அணியவில்லை என ஒருமையில் பேசி திட்டி, தாக்கியதில் மனமுடைந்த ஓட்டுநர் மணிகண்டன் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

இதில் கடுமையான தீக்காயத்துடன் போராடிய அவரை பொதுமக்கள், போலீஸார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 65 சதவீத காயத்துடன் மணிகண்டன் உயிருக்குப் போராடி வருகிறார். மணிகண்டன் தீக்குளித்த இடத்தில் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் சமாதானம் பேசி மறியலை கைவிட வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டனை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மருத்துவமனைக்கு மணிகண்டன் கொண்டுவரப்பட்ட ஒரு மணி நேரத்தில் காவல் ஆணையர் அங்கு வந்தார்.

மணிகண்டனைப் பார்த்தார். பின்னர் தைரியமாக இருக்கும்படி கூறிய ஆணையர் மணிகண்டன் உடல் நிலை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் வெளியே வந்த ஆணையரிடம் செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆணையர், ''மணிகண்டனைப் பார்த்து உடல்நிலை பற்றி அறிய வந்தேன். மருத்துவர்களிடம் பேசி இருக்கிறேன். தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x