Published : 27 Nov 2023 04:48 PM
Last Updated : 27 Nov 2023 04:48 PM

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் குட்டையாக மாறிய சாலையில் வடியாத மழைநீரால் மக்கள் அவதி

திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டலத்துக்கு உட்பட்ட 25-வது வார்டு அனுப்பர்பாளையம் முதல் கணியாம் பூண்டி வரை குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரில் தத்தளித்து சென்ற வாகனங்கள்.

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் சாலைகளின் தரத்துக்கு இந்த படங்களே சாட்சி என்கின்றனர் பலர். இதுபோன்று பல சாலைகள் குண்டும், குழியுமாகவே இருக்கின்றன. பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம்போல், மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரும், சாக்கடை நீரும் மழை ஓய்ந்த பின்னரும் திருப்பூர் மாநகர மக்களை கடும் அவதிக்குள்ளாக்குகிறது. ஒவ்வொரு முறையும் மழை வந்து சென்ற பிறகு, 4 நாட்கள் தீராத வேதனையில் சிக்கித்தவிப்பது என்னவோ அப்பாவி மக்கள்தான். ஸ்மார்ட் சிட்டி நகரமாக திருப்பூர் மாநகராட்சி திகழ வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், மக்களுக்கு ஹைடெக் நகரமாக இல்லாவிட்டாலும்கூட, இது போன்ற சங்கடங்கள் இல்லாமல் இருந்தால்போதும் என்கின்றனர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக 15 வேலம்பாளையம் சிபிஎம் நகரச் செயலாளர் நந்தகோபால் கூறும்போது, “திருப்பூர் மாநகராட்சி 1-ம் மண்டலத்துக்கு உட்பட்ட 25-வது வார்டு அனுப்பர்பாளையம் முதல் கணியாம்பூண்டி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையின் பல இடங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்திருப்பதால், வாரக்கணக்கில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பலர் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகலிலும்கூட குண்டும், குழியுமான பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். தொழிலாளர்கள் பலர் படுகாயமடைந்து, மாதக்கணக்கில் வருவாய் இழப்பதுடன், உடல்நலனும் கெடுகிறது.

இதனால் மருத்துவமனை செலவுகளை ஈடுகட்ட முடியாமல் பரிதவிப்பதை நேரில் பார்க்கிறோம். இந்த சாலையில் தினசரி பள்ளி, கல்லூரி பேருந்துகள், பனியன் நிறுவன வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இதே சாலையை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து, அரைகுறையாக சரி செய்யப்பட்டு, பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனர். விபத்து ஏற்படும்போது, அந்த விபத்தில் பாதிக்கப்படும் நபர் உடல் ரீதியாக ஈடுசெய்ய முடியாத வாழ்நாள் இழப்பை சந்திக்கிறார். அதேபோல், அவர்களது குடும்பத்தினரும் மனம் மற்றும் பொருளாதார ரீதியாகபாதிக்கப்படுகிறார்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, அரசு இயந்திரம் தொடர்ந்து செயல்பட வேண்டும். சீரமைக்க வேண்டிய சாலை பணிகளை மாநகராட்சி தொடர்ந்து கவனிப்பது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை முழுமையாக அமைப்பதில் போதிய கவனம் செலுத்தி வேலை செய்ய வைப்பது உள்ளிட்டவற்றில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும். இச்சாலையின் முக்கிய பயன்பாட்டை கருத்தில்கொண்டு, நெடுஞ்சாலைத் துறை உடனடியாக கவனம் செலுத்தி, மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்காத வகையில் தரமான சாலை அமைக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x