Published : 02 Jan 2018 09:36 AM
Last Updated : 02 Jan 2018 09:36 AM

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: தனியார் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவர்கள் இன்று (2-ம் தேதி) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தேர்வு தலைவர் சி.என்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டால் அது மக்களையும், மருத்துவர்களையும் நேரடியாக பாதிக்கும். இந்த ஆணையம் மூலம் குடும்பநலம் மற்றும் மருத்துவ சேவையை, மாநில அரசிடம் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மக்களை பாதிக்கும் இந்த மசோதாவை நிறைவேற்ற நாடு முழுவதும் மருத்துவர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கான மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஜனவரி 2-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்களும், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 7.5 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் ஒரு லட்சம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

இம்மசோதாவுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன, போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால் 6 மாத பயிற்சி மேற்கொள்வதன் மூலம், எம்பிபிஎஸ் படிக்காத மருத்துவர் அலோபதி சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மக்களின் மருத்துவ சிகிச்சை முறைகளில் பேராபத்தை விளைவிக்கும். இதன் மூலம் போலி மருத்துவர்களை உருவாக்க அரசே அங்கீகாரம் அளிப்பது போன்று அமைந்து விடும்.

இதேபோல முறையாக எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற மற்றும் பயிற்று மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற பின்னரே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடும் மருத்துவர்களை பாதிக்கும். இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே, ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து தனியார் மருத்துவர்களும் ஈடுபடவுள்ளனர் என்றார்.

அரசு மருத்துவர்கள் ஆதரவு

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் நாள் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல், காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் மட்டும், புறநோயாளிகள் பிரிவில் மட்டும் பணிகளை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை அரசு மருத்துவர்கள் தெரிவிக்கவுள்ளனர்.

வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவர்களும், கருப்பு பட்டை அணிந்து பணிபுரியவும் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x