Last Updated : 09 Jan, 2018 09:42 AM

 

Published : 09 Jan 2018 09:42 AM
Last Updated : 09 Jan 2018 09:42 AM

விபத்து ஏற்படுத்தும் காலாவதியான அரசுப் பேருந்துகள்: வேதனை தெரிவிக்கும் தற்காலிக ஓட்டுநர்கள்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பொதுப்போக்குவரத்து பாதிக்கக்கூடாது என்பதற்காக தற்காலிக வேலையாட்களை நியமித்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், அதுவே அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. விபத்துகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் பேருந்துகளில் பயணிப்பதே ஆபத்தாக முடியுமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.

ஆனால் ‘இந்த அச்ச உணர்வுக்கு நாங்கள் காரணமல்ல, அரசுப் பேருந்துகளின் நிலைதான் காரணம்’ என்கின்றனர் தற்காலிக ஓட்டுநர்கள். பல ஆண்டுகளாக பராமரிப்பே இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அரசுப் பேருந்துகளின் உண்மை நிலை, தற்காலிக ஓட்டுநர்களால் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.

ஒரு காலத்தில் அரசின் உதவியை சிறிதும் எதிர்பார்க்காமல் சொந்த வருவாயில் சிறப்பாக இயங்கிய போக்குவரத்துத்துறை, இன்று தொழிலாளர்கள் விரோத நடவடிக்கை, பராமரிப்பின்மை, தாராள தனியார் ஆதிக்கம் போன்ற காரணங்களால் சரிவைச் சந்தித்துள்ளது. தொடர் விமர்சனங்கள் எழும் அளவுக்கு பராமரிப்பு குறைபாடு காணப்படுகிறது.

அரசு பேருந்தில் லாரி ஓட்டுநர்

கோவையில் அரசுப் பேருந்தை இயக்கும் லாரி ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, ‘30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கனரக வாகனங்கள் ஓட்டுகிறேன். ஆனால் அரசுப் பேருந்தை இயக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு, அரசுப் பேருந்துகளை எப்படி ஓட்டிச் செல்ல வேண்டுமென்ற பயிற்சி கொடுக்கிறார்கள். பராமரிப்பில்லாத, காலாவதியான பேருந்தைக் கூட அவர்களால் எளிதாகக் கையாள முடியும். ஆனால் எங்களுக்கு அதில் பயிற்சி இல்லை.

முறையாக எப்சி செய்து, குழந்தைகள் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட பள்ளி வாகனத்தை ஓட்டுபவர்களிடம், காலாவதியான அரசுப் பேருந்துகளை பாதுகாப்பாக ஓட்டிச் செல்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும். நாங்களும் இதில் பழக வேண்டும். விபத்துகளுக்கு அஞ்சி எங்களில் பலர் இந்த வேலை வேண்டாம் என்கிறோம். ரூ.420 சம்பளம், உணவு, தங்குமிடம் கொடுத்தாலும் லாபமில்லை. எங்களை விட்டுவிடுங்கள் எனும் அளவுக்கு கேட்டுப்பார்த்து விட்டோம். எதிர்காலத்தில் எங்களுக்கு நெருக்கடி ஏதும் வரக்கூடாது என்பதற்காக அரசுப் பேருந்துகளை இயக்குகிறோம். புதிதாக ஓட்டுநரான பலரும் அரசுப்பேருந்தை ஓட்டிச் செல்வது எங்களுக்கே வருத்தமாகத்தான் உள்ளது. நேற்று முன்தினம் கோவையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் மக்கள் தாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பேருந்தை விட்டுவிட்டு தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அந்த அளவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

ஏராளமான அரசு சொத்துகள்

போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் அரசின் சொத்துகள் அதிகம் உள்ளன. அதை தனியார்மயமாக்கினால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இருக்கும் சொத்தை பராமரிக்கவும், மேம்படுத்தவும் தவறிவிட்டனர்.

மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. அதில் பாதிக்கும் மேல் காலாவதியாகிவிட்டன. சுங்கக் கட்டணம், எரிபொருள், இலவச பஸ் பாஸ் திட்டம் போன்றவற்றால் எப்போதுமே ஓரளவு இழப்பு உண்டு. அந்த இழப்பை கட்டண உயர்வு மூலம் எளிதில் ஈடுகட்டி, துறையை லாபத்தில் இயக்கியிருக்கலாம்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் அரசுப் பேருந்துகளின் உண்மைநிலை வேறு வடிவில் வெளிப்பட்டுள்ளது. இதற்கு தற்காலிக ஊழியர்கள் பொறுப்பல்ல. பேருந்துகளை பராமரிக்காத துறைதான் பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x