Published : 24 Nov 2023 06:16 AM
Last Updated : 24 Nov 2023 06:16 AM

சென்னையில் `சிட்டிஸ்' திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த திட்டம்

சென்னை: பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் (National Institute of Urban Affairs) ஆகியவற்றின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 28 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.95 கோடியே 25 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்தும் மேயர் பிரியா விளக்கினார்.

பிரான்ஸ் மேம்பாட்டு முகமை சார்பில் இத்திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியே 20 லட்சம் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டு, 28 பள்ளிகளில் நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிப்பறைகள் `ஸ்டெம்' ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிட்டிஸ் சவால் போட்டியில் இந்திய அளவில் வென்ற 12 நகரங்களில் சென்னையும் ஒன்று. அதற்காக தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆகியவை சார்பில் கூடுதலாக ரூ.36 கோடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு மாநகராட்சியில் உள்ள மேலும் 11 பள்ளிகள் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ளதாக மேயர் பிரியா கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x