Published : 02 Jan 2018 08:49 AM
Last Updated : 02 Jan 2018 08:49 AM

இனம், மொழி, மதம் வேறுபாடுகளை மறந்து அனைவரையும் ஒன்றுபடுத்துவது இசை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெருமிதம்

இனம், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட இசை மட்டுமே உதவுகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

சென்னையில் மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. மியூசிக் அகாடமி அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை தாங்கி, என். ரவிகிரணுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது, வி.கமலாகர் ராவ், ராதா நம்பூதிரி ஆகியோருக்கு ‘சங்கீத கலா ஆச்சார்ய’ விருது, சுகன்யா ராம்கோபால், முத்து கந்தசாமி தேசிகர் ஆகியோருக்கு டிடிகே விருது, முனைவர் டி.எஸ்.சத்யவதிக்கு ‘இசையறிஞர்’ விருது ஆகிய விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மனிதனின் படைப்பில் மிகவும் அற்புதமானது இசை. எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இசை மூலம் அன்பை தெரிவிக்க இயலும். இனம், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளை மறந்து, மக்கள் அனைவரும் ஒன்றுபடவும் ரசித்து மகிழவும் இசை மட்டுமே உதவுகிறது. எழுத்துக்கள் செய்ய முடியாததை இசை செய்துவிடும். துக்கம், மகிழ்ச்சி, அன்பு என எல்லாவற்றையும் இசை மூலம் வெளிப்படுத்த முடியும். மனிதனுக்கு நேர்மறையான எண்ணங்களை இசை உருவாக்குகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ஆண்டுகள் மரபு கொண்டது கர்நாடக இசை. இதைப் பற்றி விவாதித்தால், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் இல்லாமல் விவாதம் நிறைவடையாது. அவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்களிடம் பிரபலமாக உள்ளன. இன்று விருது பெற்ற கலைஞர்களை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி வரவேற்றுப் பேசும்போது, “மியூசிக் அகாடமி உட்பட பல இசை அமைப்புகளுக்கு அடிக்கல் நாட்டிய பெருமை நீதித்துறையைச் சேர்ந்த பெருமக்களுக்கே உண்டு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த டி.எல்.வெங்கட்ராம ஐயர், ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்றவர். மியூசிக் அகாடமியின் 3-வது தலைவராகவும் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தொடங்கிவைத்து பெருமை சேர்த்துள்ளனர்’’ என்றார்.

‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற என்.ரவிகிரண், விருது பெற்ற மற்றவர்களின் சார்பில் ராதா நம்பூதிரி ஆகியோர் ஏற்புரையாற்றினர். ‘சங்கீத கலாநிதி’ டி.என். கிருஷ்ணன் பாராட்டுரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x