Last Updated : 20 Nov, 2023 07:07 PM

 

Published : 20 Nov 2023 07:07 PM
Last Updated : 20 Nov 2023 07:07 PM

‘ஜல் ஜீவன்’ இனி ‘இனிய குடிநீர்’... - மத்திய அரசின் திட்டங்களை தமிழில் குறிப்பிட தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும்போது வழக்கமாக அவற்றின் பெயர்கள் இந்தியிலேயே கூறப்படுகின்றன. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில் மொழிபெயர்த்து அதிகாரிகள் குறிப்பிடவேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விடுபட்ட திட்டப் பயனாளிகளை சேர்க்கவும் விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அருகேயுள்ள திம்புநாயக்கன்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மத்திய அரசின் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்தும் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியது: ''புதுச்சேரியில் பழங்குடியின மக்களைக் கவுரவிக்கும் விழாவுக்கு அதிகமானோர் வந்து பெருமைப்படுத்தினர். அரசு இவ்வளவு நல்லது செய்கிறதே என்று பொறுத்துக் கொள்ளாத சிலர் பொறாமையில் விழாவில் பிரச்சினையை ஏற்படுத்தினர். மத்திய அரசுக்கு பழங்குடியின மக்கள் ஆதரவளிப்பதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் காய்கறி விற்போர் முதல் அனைவருமே டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை எளிதாக செயல்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு உதாரணமாகும். அம்பேத்கர் பெயரை சுருக்கித்தான் பீம் ஆப் என்று பெயரை பிரதமர் வைத்தார். மக்களிடையே மத்திய அரசுத் திட்டங்களை கொண்டு செல்லும் போது வழக்கமாக அவற்றின் பெயர் இந்தியிலேயே கூறப்படுகிறது. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில் மொழிபெயர்த்து அதிகாரிகள் குறிப்பிட வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில் 'ஜல் ஜீவன்' திட்டத்தை இல்லம்தோறும் 'இனிய குடிநீர்' என தமிழில் மொழி பெயர்க்கவேண்டும்.

உஜ்வாலா திட்டத்தை இலவச வீட்டு எரிவாயு திட்டம், பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் சொல்லும்போதுதான் புரியும். அனைத்துத் திட்டங்களையும் செய்கிறோம். மக்களுக்கு புரியாத மொழியில் கூறுவதால் அத்திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது என்பதைக் கூட அறியமுடியாத நிலையுள்ளது. அதனால் மத்திய அரசுத் திட்டங்களை தமிழில் மக்களுக்குப் புரியும் வகையில் குறிப்பிடவேண்டும். இனி மத்திய அரசு திட்டங்களின் தமிழாக்கத்தை அதிகாரிகள் குறிப்பிடவேண்டும்'' என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, எம்.எல்.ஏ.கே.எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வரவேற்றார். உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x