Last Updated : 19 Jan, 2018 11:38 AM

 

Published : 19 Jan 2018 11:38 AM
Last Updated : 19 Jan 2018 11:38 AM

10 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பொங்கல் விழா: அரியலூர் அருகே க.பொய்யூர் கிராம மக்கள் கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டம் க.பொய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

அரியலூர் அருகேயுள்ள க.பொய்யூர், எழில் மிகுந்த சிறு கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில், அதே கிராமத்தைச் சேர்ந்த 46 மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். இப் பள்ளியில் 1 தலைமையாசிரியர், 1 ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

தலைமையாசிரியராகப் பணிபுரியும் ரவிச்சந்திரன், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 10 ஆண்டுகளாகப் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண் டாடி வருகிறார். ஆசிரியை மீனாகுமாரி, விழா சிறப்பாக நடை பெற உறுதுணையாக இருந்து வருகிறார்.

கிராம முக்கிய பிரமுகர்கள், மாணவர்களின் பெற் றோர் ஆகியோரின் முழு பங்களிப்புடன் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்குத் தேவையான பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கிராம மக்களே கொண்டுவந்து கொடுக் கின்றனர்.

19ty_ravichanthiran ரவிச்சந்திரன் right

பொங்கல் பண்டிகையையொட்டி சில தினங்கள் முன்னதாக பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடுவர். ஆனால், இப் பள்ளியில், தை மாதத்தில்தான் பொங்கல் கொண்டாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், பொங்கல் பண்டிகை முடிந்து பள்ளி திறக்கப்படும் ஓரிரு நாளில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவையொட்டி, பள்ளி வளாகமே வண்ணமயமாகிறது. கிராம மக்கள் ஒன்றிணைந்து பள்ளியையும், பள்ளி வளாகத்தையும் தூய்மைப்படுத்தி, பல வண்ணக் காகிதங்களைக் கொண்டு அலங்கரித்து, இனிமையான பாடல்களை ஒலிக்கச் செய்கின்றனர். பொங்கல் சமைக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.

பொங்கல் விழாவுக்கு கல்வித்துறை அதிகாரிகளை வரவழைத்து, பெற்றோர்களுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து படையலிட்டு, அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழா நடப்பாண்டும் (ஜன.18) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு காலண்டர், டைரி, பேனா உள்ளிட்ட பொருட்களும் பள்ளி சார்பில் வழங்கப்பட்டது.

அதேபோல, பொங்கல் விழா மட்டுமன்றி குடியரசு தின விழா, சுதந்திர தின விழா நாட்களிலும் சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது.

அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள், திருவள்ளுவர், பாரதிதாசன், பாரதியார் உள்ளிட்டோரின் பிறந்த நாள் விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. இதுபோன்ற விழா நாட்களில் மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் இப்பள்ளியில் நடத்தப்படுகின்றன.

பொங்கல் விழா குறித்து பள்ளித் தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் கூறியது: பள்ளியில் கல்வி கற்பித்தல் முக்கியம் என்றாலும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடனான நல்லுறவை மேம்படுத்தவே பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இப்பள்ளியில் நடத்தப்படும் பொங்கல் விழாவை கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். அன்றையதினம் கிராம மக்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் சிறப்பான முறையில் பொங்கல் விழாவை நடத்திக் கொடுப்பது வழக்கமாக உள்ளது.

19ty_Palanimuthu பழனிமுத்து

பொங்கல் கொண்டாட்டத்துக்கான செலவுகள் அனைத்தையும் கிராம மக்களே செய்து தங்கள் இல்ல விழாவைப் போல கொண்டாடுவதை சுற்று வட்டார கிராம மக்களும் பாராட்டுகின் றனர் என்றார்.

க.பொய்யூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிமுத்து கூறியபோது, “வெளியூரில் இருந்து இந்த கிராமத்துக்கு ஆசிரியராக வேலைக்கு வந்தாலும், தனது கிராமத்தைப் போலவும், மாணவர்களை தனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் தலைமை ஆசிரியர் பார்த்துக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

மாணவர்கள், ஆசிரியரிடம் பழகும் விதம் அனைவரையும் வியக்க வைக்கிறது. ஒரு நண்பரைப் போல அனைத்து மாணவர்களிடமும் எந்த ஒரு வேற்றுமையுமின்றி தலைமை ஆசிரியர் பழகிவருகிறார். ஓய்வுபெறும் வரை இந்தப் பள்ளியிலேயே அவர் பணியாற்ற வேண்டுமென்பது எங்கள் கிராம மக்களின் ஆசை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x