Published : 19 Nov 2023 03:00 AM
Last Updated : 19 Nov 2023 03:00 AM

சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற அவலம் @ தருமபுரி

பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியில் அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை போதிய சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. தனித்தனி மலை முகடுகளில் உள்ள இந்த கிராமங்களில் தலா 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த மலை கிராமங்களில் தொடக்கப் பள்ளி, மின்சாரம் ஆகிய இரு வசதிகளைத் தவிர மருத்துவம் போன்ற வசதிகள் எதுவும் கிடையாது.

இங்கு வசிப்பவர்கள், மலையில் இருந்து ஆபத்தான பாதையில் நடைபயணமாக 7 கிலோ மீட்டர் பயணித்து மலையடிவாரத்துக்கு சென்றால் தான் பேருந்து மூலம் பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியும். சாலை வசதி கேட்டு தொடர்ந்து இந்த மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் மேற்கொண்ட முயற்சிகளால் கோட்டூர் மலை கிராமத்துக்கு மட்டும் சாலை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (நவ. 18) சித்தபெலான் (75) என்ற முதியவர் விளைநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரை பாம்பு கடித்தது. இதையறிந்த கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ‘தூளி’ கட்டி அதில் முதியவரை அமர வைத்து 7 கிலோ மீட்டர் தூரம் மலை அடிவாரம் வரை தூக்கிச் சென்றனர். பின்னர் இருசக்கர வாகனம் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து, அலகட்டு கிராம மக்கள் கூறும்போது, அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலைகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் எங்களால் எங்கள் மூதாதையர் வாழ்ந்த இடங்களை விட்டு வெளியேறி தரைத் தளத்துக்கும், நகரங்களுக்கும் குடிபெயர முடியவில்லை. பாரம்பரிய இடத்தில் வாழ்வது மன நிறைவையும், பாதுகாப்பான உணர்வையும் தருகிறது. எனவேதான் எங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோருகிறோம். விஷ பூச்சிகள் கடிக்கும்போது, பிரசவத்தின்போதும் இங்குள்ளவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். எனவே, எங்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x