Published : 18 Nov 2023 11:10 AM
Last Updated : 18 Nov 2023 11:10 AM

திருப்பூரில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வணிகர்கள் அதிருப்தி

போக்குவரத்து மாற்றத்தை ஒட்டி, திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவில் நேற்று வைக்கப்பட்டிருந்த பேரிகேடு.

திருப்பூர்: திருப்பூர் மாநகர் போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்குவது புஷ்பா திரையரங்கு வளைவு மற்றும் ரயில் நிலையம். இந்த 2 இடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அரசியல் கட்சிகள் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டாலோ போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில், புஷ்பா திரையரங்கு வளைவில் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றப்பட்டிருப்பது, வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறும்போது, “புஷ்பா திரையரங்கு வளைவு, ரயில் நிலையம், பெரியார் - அண்ணா சிலைகள் ரவுண்டானா மற்றும் குமரன் சாலை உள்ளிட்டவை போக்குவரத்து நெருக்கடி, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிறைந்த பகுதிகள் ஆகும். தற்போது, புஷ்பா திரையரங்கு வளைவில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. திருப்பூர் வடக்கு ரயில் நிலைய நுழைவுவாயிலுள்ள புஷ்பா திரையரங்க வளைவு சந்திப்பானது, அவிநாசி சாலை, வஞ்சிபாளையம், பெருமாநல்லூர் சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது.

நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வது, வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர் செல்லும் ரயில் பயணிகள் பல்லாயிரக்கணக்கானோர் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். இந்த போக்குவரத்து சந்திப்பில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, காவல்துறை மேற்கொண்டுள்ள போக்குவரத்து மாற்ற நடவடிக்கை அனைவரையும அதிருப்தியடைய வைத்துள்ளது. வஞ்சிபாளையம் சாலையில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், திருப்பூர் தெற்கு பகுதிக்கு செல்ல புஷ்பா திரையரங்க வளைவை கடந்து செல்வார்கள்.

ஆனால், தற்போது போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதால், வஞ்சிபாளையம் சாலையில் இருந்து திருப்பூர் பெரியார் - அண்ணா சிலைகள் ரவுண்டானா, குமரன் சாலை மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகரின் திருப்பூர் தெற்கு பகுதிக்கு வாகனங்கள் செல்ல, அவிநாசி சாலையில் கீரணை சந்திப்பு (ராம்நகர்) சென்று திரும்பி, மீண்டும் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஏறி அதன் பின்னர் செல்ல வேண்டும். அந்த சாலை ஏற்கெனவே குறுகலாக இருப்பதால் வாகன நெருக்கடி இருக்கும். புதிய பேருந்து நிலையம் மற்றும் அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கல்லூரி சாலை செல்ல வேண்டுமென்றால், பெரியார்- அண்ணா சிலைகள் ரவுண்டானா சென்றுதான் திரும்ப வேண்டும்.

பெருமாநல்லூரில் இருந்து வரும் வாகனங்களும் ரயில்வே மேம்பாலம் ஏறி இறங்கி தான், அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கு வளைவு பகுதிக்கு வர வேண்டும். இருசக்கர வாகனங்கள், கார்கள் வேண்டுமென்றால் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழாக உள்ள ஹார்வி சாலை வழியாக அவிநாசி சாலை மற்றும் கல்லூரி சாலையை சென்றடையலாம். ஆனால், கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை ரயில் நிலைய மேம்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

கொங்கு நகர், புதுராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலரும் வடக்கு பகுதிக்கு வருவதற்கு ஹார்வி சாலையைதான் பயன்படுத்துகிறார்கள். இது தற்போது போக்குவரத்து நெருக்கடிக்கே வழிவகுக்கும். புஷ்பா திரையரங்கு வளைவு சிக்னலில் உள்ள 50 மீட்டர் இடைவெளி தூரத்தை, கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் வரை சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகம், ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்கள், பேருந்துக்கு வருபவர்கள், ரயில் நிலையத்துக்கு வருபவர்கள், கல்லூரி செல்பவர்கள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் அவதிப்படுவார்கள்.

ஏற்கெனவே இருந்ததுபோல் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க, கூடுதலாக இரண்டு போக்குவரத்து போலீஸார் நியமித்தாலே போதுமானது. இதன்மூலமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும். கூட்டம் இல்லாத காலங்களில் இந்த திட்டம் எளிதாக இருக்கலாம். ஆனால், முகூர்த்த நாட்கள், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். பண்டிகை நாட்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள். தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட சோதனை முயற்சியானது, பெரியார் - அண்ணா சிலைகள் ரவுண்டானாவில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களால், திருப்பூர் தெற்கு பகுதியிலுள்ள பிரதான நுழைவுவாயிலில், எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

அதேபோல் காலை, மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கடக்கும் பிரதான சாலையாக இருப்பதால், இந்த திட்டத்தை சோதனை அளவிலேயே கைவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு கூறும்போது, “புஷ்பா திரையரங்க வளைவு போக்குவரத்து மாற்றம் சோதனை ஓட்டம்தான். பெருமாநல்லூர் சாலை, அவிநாசி சாலையில் இருந்து வருபவர்கள் திருப்பூர் தெற்கு பகுதிக்கு செல்ல இந்த மாற்றத்தை செய்துள்ளோம். இதை பலரும் வரவேற்றுள்ளனர். புஷ்பா திரையரங்கு வளைவு சிக்னலில் வாகன ஓட்டிகள் யாரும் காத்திருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x