Published : 20 Jan 2018 10:02 AM
Last Updated : 20 Jan 2018 10:02 AM

சென்னையில் மாணவர் உயிரிழந்த விவகாரம்: தனியார் பள்ளி தாளாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

தாமதமாக வந்ததால் ‘வாத்து நடை’ தண்டனை அளிக்கப்பட்ட மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் மீது போலீஸார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்த முரளியின் மகன் நரேந்தர் (15), அதே பகுதியில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த 17-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்குத் தாமதமாக வந்த நரேந்தர் உள்ளிட்ட மாணவர்களை ‘வாத்து நடை’ நடந்து பள்ளி மைதானத்தைச் சுற்றி வருமாறு உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மைதானத்தைச் சுற்றி வந்தபோது நரேந்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், பள்ளி தாளாளர் ஜோசப் பெர்னாண்டஸ் மீது திரு.வி.க. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன்படி அவர் மீது 304ஏ (உள் நோக்கம் இல்லாமல் கவனக் குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 23 (சிறுவர்களை துன்புறுத்துதல்) ஆகிய 2 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர் இறந்ததால் டான்பாஸ்கோ பள்ளிக்கு நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x