Published : 19 Jan 2018 10:35 AM
Last Updated : 19 Jan 2018 10:35 AM

மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11 முதல் 14 வரை நடக்கிறது: தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறை மேம்பாடு தொடர்பான 2 நாள் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், www.makeinindiadefence.com என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். ‘இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி’, ‘எளிதாக்கப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தி கொள்கைகள்’ ஆகிய 2 நூல்களையும் மத்திய அமைச்சர் வெளியிட, முதல்வர் கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார். தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.சி. சம்பத், பி.பெஞ்சமின், மத்திய பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் அஜீத்குமார், முப்படை துணை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்மூலம் 2013-14-ல் ரூ.41 ஆயிரம் கோடியாக இருந்த ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 2016-17-ல் ரூ.31 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யும்போது இந்திய தொழில் துறை வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும். அந்நியச் செலவாணி கையிருப்பும் அதிகரிக்கும். அதனால்தான் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி, ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ராணுவ தளவாடங்களை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அவற்றை களைவதற்காக கொள்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தனியார் நிறுவனங்கள் தாங்கள் எந்தெந்த கருவிகளை, தளவாடங்களை ராணுவத்துக்கு அளிக்க முடியும் என்பதை தெரிவிக்கலாம். தளவாடங்கள் சோதனை செய்யப்பட்ட பிறகு உற்பத்திக்கான அனுமதி ஆணை வழங்கப்படும். ஆண்டுக்கணக்கில் காத்திருக்காமல் விரைவாகவே இந்தப் பணிகள் நடக்கும் வகையில் கொள்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் கொண்ட முப்படைகளின் துணை தளபதிகள், இந்த 2 நாள் கூட்டத்தில் இருப்பார்கள். அவர்களிடம் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

ஆவடி பீரங்கி தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை என தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறைக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தற்போது சுமார் 150 நிறுவனங்கள் ராணுவத்துக்கு தளவாடங்களை வழங்கி வருகின்றன. தொழில்நுட்பங்களை வேறு நிறுவனத்திடம் இருந்து பெற்று தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் உள்ளன. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அந்நிறுவனத்தின் பின்னணி, முதலீடு எங்கிருந்து வருகிறது போன்ற அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்படும். எனவே, எந்த பாதுகாப்பின்மை பிரச்சினைகளும் வர வாய்ப்பில்லை. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் ராணுவத்துக்கு பொருட்களை வழங்கலாம்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ராணுவ கண்காட்சி, இந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் 14 வரை மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரையோரம் நடைபெறும். இதற்கான நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் 80 நாடுகள் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக இந்தக் கண்காட்சி நடக்கவுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்பதில் ராணுவம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டது. கடந்த டிசம்பர் 27-ம் தேதியுடன் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x