Published : 17 Jan 2018 12:53 PM
Last Updated : 17 Jan 2018 12:53 PM

பத்மாவத் திரைப்படத்துக்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்: ராஷ்ட்ரிய சத்ரிய மகாசபா சமஜியோதன் அமைப்பு கோரிக்கை

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டுமென ராஷ்ட்ரிய சத்ரிய மகாசபா சமஜியோதன் சமிதி அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

கோவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வமைப்பின் தேசிய தலைவர் ராம் அனூஜ் சிங் தெரிவித்ததாவது: ராஜ்புத் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள பத்மாவதி திரைப்படம் தற்போது, பத்மாவத் என்ற பெயர் மாற்றத்தோடு திரையிடப்பட உள்ளது. திரைப்பட தணிக்கைத் துறை தலைவர் பிரசன் ஜோஷிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே துரதிர்ஷ்டவசமாக இப்படம் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி ராஜ்புத் வரலாறு, மரபுகள் எதுவும் திரைப்படத்தில் மாற்றப்படவில்லை. ராம்சரித்மனாஸ் என பெயர் மாற்றம் செய்வதால் கதாபாத்திரத்தை மாற்ற முடியாது. வரலாற்று நூல்களின் பெயரை மாற்றுவதால், அதன் உள்ளடக்கம், கோட்பாடு, தத்துவம், முக்கியத்துவத்தை மாற்ற முடியாது. அதுபோலவே இந்த திரைப்படமும் உள்ளது.

சத்ரியர்கள் பெருமை, வீரம், தைரியம், தியாகத்தின் அடையாளமாக அறியப்பட்டவர் ராணி பத்மாவதி. அவரது வரலாறு திரிக்கப்பட்டுள்ளது சமூகத்தையே அவமதிக்கும் வகையில் உள்ளதாக கருதுகிறோம். அதனாலேயே நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்சினையில், முழு படத்தையும் எங்களுக்கு காண்பிப்பதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்தார். நவ.2-ம் தேதி, எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென திரைப்பட தணிக்கைத் துறைக்கு கடிதம் எழுதினோம்.

ஆனால் எங்களுக்கு திரைப்படம் காட்டப்படவில்லை. ராணி பத்மாவதி குடும்பத்தின் மீது கோபத்தில் உள்ள அவரது வம்சாவளியினர் சிலர், வரலாற்று ஆசிரியர்கள் சிலரது முடிவின் அடிப்படையில் திரைப்படத்தை அனுமதித்துள்ளனர். ஆட்சேபகரமான கருத்துகள் இல்லை என்றால் எதற்காக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

20 கோடிக்கும் அதிகமாக வாழும் சத்ரிய மக்களின் உணர்வுகளை மதித்து நாடு முழுவதும் இப்படத்துக்கு தடை விதிக்க பிரதமரையும் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் தடை விதிக்க முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். தடை விதித்தால் படத் தயாரிப்பாளருக்கு ஏற்படும் இழப்பைக் கூட எங்கள் சமூக மக்கள் வசூலித்துக் கொடுத்து விடுகிறோம். ஆனால் எங்கள் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x