Published : 08 Jan 2018 09:52 AM
Last Updated : 08 Jan 2018 09:52 AM

குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்ட சென்னையில் மாரத்தான் ஓட்டம் : 4 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் நோக்கில் சென்னையில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அடையாறு புற்றுநோய் மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கென தனி வார்டு அமைக்கவும் நிதி திரட்டுவதற்காக நெவில் எண்டவர்ஸ் பவுண்டேஷன் சார்பில் ‘டான் டு டஸ்க்’ மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முழு மாரத்தான் ஓட்டத்தை மருத்துவர் கண்ணன் புகழேந்தி, சென்னை ரன்னர் அமைப்பின் தலைவர் ஷாஹித் கந்திரிகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். அரை மாரத்தான் ஓட்டத்தை ஏடிஜிபி சைலேந்திரபாபு, நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

குழந்தைகள் பங்கேற்ற ஓட்டத்தை அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் வி.சாந்தா தொடங்கிவைத்தார். ஓட்டத்தை நிறைவு செய்த அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த மாரத்தான் ஓட்டங்களில் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் வி.சாந்தா இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்த புற்று நோய் மையத்தில் நலிவடைந்தோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 65 சதவீத குழந்தைகள் குணமடைந்து, புற்று நோயில் இருந்து மீண்டுள்ளனர். பலரது நன்கொடைகளால் இது சாத்தியமாகிறது. மாரத்தான் ஓட்டங்களை நடத்தி நிதி திரட்டும் நெவில் எண்டவர்ஸ் பவுண்டேஷனின் முயற்சியை வரவேற்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x