Published : 16 Nov 2023 10:59 AM
Last Updated : 16 Nov 2023 10:59 AM

”தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது” - அன்புமணி

சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் 2025-ஆம் ஆண்டிலும் செயல்படுத்தக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று கடந்த 16.08.2023-ஆம் நாள் பிறப்பித்திருந்த அறிவிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற்றிருக்கிறது. மருத்துவக் கல்வி கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கிய தென் மாநிலங்களை தண்டிக்கும் வகையிலான அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் பேருக்கு அதிக அளவாக 100 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது தான் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதியாகும். இந்த விதி 2024-25 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிப்படி 7.68 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் 7686 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டும் தான் அதிக அளவாக இருக்க முடியும். ஆனால், அதை விட அதிகமாக இப்போதே 11,225 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களையும் ஏற்படுத்த முடியாது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கை குறித்த செய்தி வெளிவந்தவுடன், அதை எதிர்த்து தமிழ்நாட்டில் முதன் முதலாக, கடந்த செப்டம்பர் 29-ஆம் நாள் நான் தான் அறிக்கை வெளியிட்டேன். அதன் தொடர் நடவடிக்கையாக கடந்த 04.11.2023-ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவுக்கும் கடிதம் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் பயனாக தேசிய மருத்துவ ஆணையம் அதன் அறிவிக்கையை திரும்பப் பெற்றிருப்பது, இச்சிக்கலுக்கு தொடக்கம் முதலே குரல் கொடுத்தவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக பிரதமர், மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான தடையை தேசிய மருத்துவ ஆணையம் ஓராண்டுக்கு மட்டுமே நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுடன் கலந்தாய்வு நடத்தி, 2025-26 ஆம் ஆண்டு முதல் தடையை செயல்படுத்த ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இது தவறு.

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்ற தடைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முன்வைத்துள்ள காரணங்கள் அனைத்தும் ஓராண்டுக்கு மட்டும் பொருந்தக் கூடியவை அல்ல; காலாகாலத்துக்கும் பொருந்தக் கூடியவை. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாகவே அங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உருவாகியுள்ளன. அதற்காக அந்த மாநில அரசுகளை மத்திய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இந்த நியாயம் ஓராண்டுக்கு மட்டுமானதல்ல.... நிரந்தரமானது.

எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் பேருக்கு அதிக அளவாக 100 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற ஆணைக்கு ஓராண்டுக்கு மட்டுமின்றி நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x