

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவர் காலமானார். அவருக்கு வயது 102.
விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக சங்கரய்யா தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, மருத்துவமனையில் இருந்த தியாகி சங்கரய்யாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சங்கரய்யாவுக்கு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கட்சியின் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அனைத்து கிளைகளும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடவும், ஒரு வார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்வேக அரசியல் வாழ்வின் குறிப்புகள்: மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்தவர் என்.சங்கரய்யா. 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டியவர். 1941-ல் போராட்டக் கனல் மதுரையையும் பற்றியது. பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா கைதானார். படிப்பே நின்றுவிட்டது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது.
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது நெல்லையில் பல்வேறு கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினார். தடியடியில் காயமடைந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் இருந்த காலத்தில் காங்கிரஸார் பலரை கம்யூனிஸ்ட்களாக்கிவிட்டார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக 1943-ல் பொறுப்பேற்றார். கட்சியை வளர்க்கப் பல உத்திகளைக் கையாண்டார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்!
முதன்முறையாக 1957 தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1962-லும் தோல்வி. 1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் அவர் வென்றார்.
சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998-ல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை (1998) நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்களும், தேச பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார். கட்சியில் ‘இரும்பு மனிதர்’ என்ற பெயர் சங்கரய்யாவுக்கு உண்டு. அவரது கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பண்பான நடத்தை ஆகியவற்றால் இன்றைக்கும் என்றைக்கும் எண்ணற்ற இளையோரை வசீகரிப்பவர் சங்கரய்யா.
சங்கரய்யாவுக்கு தலைவர்கள் புகழாஞ்சலி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, நீண்ட காலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் உற்ற தோழனாக விளங்கியவர், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்விற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த தோழர். என்.சங்கரய்யாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது, என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்" என சங்கரய்யா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
"தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே "அடுத்த 24 மணி நேரத்துக்கு, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்
“பிஎம் கிசான் திட்ட நிதியை விடுவிப்பது உள்நோக்கம் கொண்டது”: பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி எனப்படும் பிஎம் - கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 புதன்கிழமை விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேர்தலை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் பலி: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்ததில், அதில் இருந்த 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை உறுதி செய்துள்ளார்.
40 பேரை மீட்கக் கோரி சக தொழிலாளர்கள் போராட்டம்: உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி, புதன்கிழமை நான்காவது நாளாக நடந்தது. புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளே சிக்கியிருப்பவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று சக தொழிலாளர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “எங்கள் ஆட்களை வெளியே எடுங்கள்” என்று முழக்கமிட்டனர்.
விராட் கோலி 50-வது சதம் - சச்சின் சாதனை முறியடிப்பு: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர் விராட் கோலி சதம் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் 50-வது சதம் எனும் மைல் கல்லை எட்டி சச்சின் டெண்டுலர்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
“காசாவில் குழந்தைகள், பெண்கள் கொலையை நிறுத்துங்கள்”: காசாவில் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவுத்தியுள்ளார். இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டித்துள்ளார்.