Published : 15 Nov 2023 03:01 PM
Last Updated : 15 Nov 2023 03:01 PM

அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு சங்கரய்யாவுக்கு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு: மார்க்சிஸ்ட்

சென்னை: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (நவ.16) காலை 10 மணிக்கு கட்சியின் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) உடல் நலக்குறைவின் காரணமாக இன்று (நவம்பர் 15) காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது.

இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10 மணியளவில், சிபிஐ(எம்) அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும். கட்சியின் அனைத்து கிளைகளும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடவும், ஒரு வார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 102.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர். ஆனால், சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் உயிர் பிரிந்தது. மறைந்த சங்கரய்யாவின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x