Published : 15 Nov 2023 12:41 PM
Last Updated : 15 Nov 2023 12:41 PM

புகழஞ்சலி - சங்கரய்யா | “தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர் ” - கே.எஸ்.அழகிரி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, "தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா தனது 102-வது வயதில் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

தோழர் என். சங்கரய்யாவின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று காலை மறைந்தார். அவருக்கு வயது 102.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது. முன்னதாக, மருத்துவமனையில் வைக்கப்ப்டடிருந்த சங்கரய்யாவின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x