Published : 16 Jan 2018 02:02 PM
Last Updated : 16 Jan 2018 02:02 PM

சிராவயல் மஞ்சு விரட்டு: காளைகள் முட்டி இருவர் உயிரிழப்பு; 50 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டில் காளைகள் முட்டியதில் இருவர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்

கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி எந்த சிக்கலும் இல்லாமல் தற்போது கோலாகலமாக தொடங்கி நடந்து வருகின்றது. நேற்று முன்தினம் (ஜன. 14) மதுரை அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு நடந்தது.

476 மாடுபிடி வீரர்களும், 440 காளைகளும் போட்டியில் பங்கேற்றன. இதில் 6 மாடுபிடி வீரர்கள், 16 பார்வையாளர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர்.

நேற்று (ஜன. 15) மாட்டுப் பொங்கல் அன்று பாலமேட்டில் 2-வது ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி சார்பில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் 1,080 காளைகளும், 1,118 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் இரு சக்கர வாகனம், தங்கக்காசு, பீரோ, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் முதல் அண்டா, நாற்காலிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் என பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், ஜல்லிக்கட்டுப்போட்டியைப் பார்க்க வந்த திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி எமக்கலாபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து(19) என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் நூற்று கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மஞ்சு விரட்டை காண ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.  மஞ்சு விரட்டு போட்டியையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து இருந்தனர்.

போட்டியில் வழக்கம்போல், காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது, காளை ஒன்று பார்வையாளர்களை முட்டித்தள்ளியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x