Published : 14 Nov 2023 08:39 PM
Last Updated : 14 Nov 2023 08:39 PM

மழைக்கு உருக்குலைந்த மதுரை சாலைகள்: பள்ளங்களில் தெர்மாகோல், கம்புகளை வைத்து விசித்திர ஏற்பாடு

மதுரை: மதுரையில் மழைக்கு சாலைகள் உருக்குலைந்து மேடு, பள்ளங்களாகியுள்ளன. இதில் வாகன ஓட்டிகள், தடுமாறி சருக்கி விழுந்து கை, கால்களை முறித்து செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. பள்ளங்களில் கம்புகளை நட்டும், தெர்மோகோல்களை போட்டும் விநோத முறையில் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த ஆன்மிக சுற்றுலா நகரான மதுரையில் சாலைகள் பொதுவாகவே மோசமாகத் தான் உள்ளன. ஒரு நகரத்தின் சாலைகளே அதன் அடிப்படை வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. ஆனால், மதுரை நகர்பகுதி சாலைகள் குறுகலாகவும், பள்ளங்கள் நிறைந்தும் கற்கள் பெயர்ந்து உருக்குலைந்துபோய் உள்ளன. மழைக்காலத்தில் பள்ளங்கள் எது, சாலை எது எனத் தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் வாகனங்களை விட்டு தடுமாறி கீழே விழுந்து கை, கால்கள் முறிந்து படுகாயம் அடைகின்றனர்.

இதுபோன்ற விபத்துகளும், அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளும் வெளிச்சத்துக்கு வராததால் சாலைகளின் அவலமும், அதில் தினமும் பயணம் செய்யும் மதுரைவாசிகளின் ஆதங்கமும் வெளியே தெரியவில்லை. தற்போது ஒரே நேரத்தில் பாதாள சாக்கடை பணிகளும், புதிய சாலைப் பணிகளும், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்களும் நடப்பதால் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்த முடியாமல் சீரமைக்காத பள்ளங்கள் நிறைந்த சாலைகளையே பயன்படுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை மதுரையில் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் பேட்ஜ் ஒர்க் பார்த்த சாலைகள் மட்டுமில்லாது, கடந்த சில ஆண்டுக்கு முன் போட்ட சாலைகள் வரை அனைத்தும் சிதிலமடைந்துள்ளன. மதுரை கே.கே.நகர் 80 அடி சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி செல்வதற்காக இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் நிரப்பப்பட்டு பேட்ஜ் ஒர்க் பார்க்கப்பட்டது. தற்போது அந்த பள்ளங்களில் போடப்பட்ட கற்கள், மண் போன்றவை மழைக்கு அடித்து செல்லப்பட்டதில் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இப்பகுதியில் மழை பெய்யும்போதெல்லாம் மழைநீர் தெப்பம்போல் தேங்கும். அப்போது வாகன ஓட்டிகள், வேகமாக செல்லும்போது பள்ளங்கள் தெரியாமல் வாகனங்களை விட்டு கீழே விழுந்து செல்கின்றனர். தற்போது இந்த பள்ளங்களில் மண், கற்களை போட்டு தற்காலிக ஏற்பாடுகளை செய்யக்கூட மனமில்லாத அதிகாரிகள் தெர்மாகோல்களை போட்டு சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்களை அடையாளப்படுத்துகின்றனர்.

அதுபோல், பெரியார் பஸ்நிலையம் அருகே சாலையில் உள்ள பள்ளங்களில் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் வாகனங்களை விடாமல் இருக்க கம்புகளை நட்டுள்ளனர். பழுதடைந்த சாலைகளை சீரமைக்காமல் இதுபோல் தெர்மாகோல், கம்புகளை நட்டு விசித்திர எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வது பொதுமக்களிடம் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர தலைக்காய சிகிச்சைப் பிரிவு முன் அண்ணா பஸ்நிலையம் அருகே பனங்கல் சாலை முழுவதும் வழிநெடுக பள்ளங்களாக காணப்படுகின்றன. இந்த பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் இந்த பள்ளங்களில் வானகங்களை ஏற்றி இறக்கி மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆம்புலன்களில் அவசர சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நோயாளிகளும் வாகனங்கள் இந் பள்ளங்களில் ஏறி, இறங்கும்போது குலுங்கி பாதிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே பீக் அவரில் இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் நொந்துபோய் செல்கின்றனர். திருப்பரங்குன்றம் சாலையில் காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து பழங்காநத்தம் ரவுண்டானா சிக்னல் பகுதிவரை சமீபத்தில்தான் பேட்ஜ் ஒர்க் பார்த்து சாலை சீரமைக்கப்பட்டது. தற்போது மழைக்கு பேட்ஜ் ஒர்க் பார்த்த இந்த சாலைகள முற்றிலும் உருக்குலைந்து பள்ளங்களாக காணப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x