தமிழக கனமழை முதல் இபிஎஸ் Vs மா.சுப்பிரமணியன் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.14, 2023

படம்: ஜோதி ராமலிங்கம்
படம்: ஜோதி ராமலிங்கம்
Updated on
3 min read

13 மாவட்டங்களில் கன, மிக கனமழை வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்துக்கு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தென்கிழக்கு வங்கக் கடலில், செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நிலவக்கூடும்.

இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாக வரும் 16-ம் தேதி வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும். மேலும், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மற்றுமொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, என்றார்.

இதனிடையே, மழை பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

‘தமிழகத்தில் தயார் நிலையில் 4967 நிவாரண முகாம்கள்’: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை நிவாரண முகாம்களில் யாரும் தங்கவைக்கப்படவில்லை. ஒருவேளை அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களை உஷார்படுத்தி, மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்தான் அதிகப்படியான மழை பெய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அங்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சென்னையில் தொடரும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சென்னையில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தொடர்ந்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, சில பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், புதன்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள் - அறிக்கை சமர்ப்பிப்பு: இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

தமிழக மருத்துவத் துறை - இபிஎஸ் Vs மா.சுப்பிரமணியன்: திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். இந்த கையாலாகாத ஆட்சியாளர்களுக்கு வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவது உறுதி" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், சுகாதாரத் துறை மந்திரியின் அலட்சியம் பற்றியும் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், பேட்டிகளின் வாயிலாகவும் நான் தெரிவித்த பின்பும், இன்றும் நோயாளிகள் மருந்துகளுக்காக தவிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே, தற்போது ரூ.240.99 கோடி மதிப்பிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதற்கு பிறகும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாக சென்று ஆய்வு செய்வோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.

கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப் பதிவு: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 3-வது நாளாக மீட்புப் பணிகள்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேசமயம், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக, உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில், 40 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரவமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள இளைஞருக்கு மரண தண்டனை: கேரளாவில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அசாஃபக் அலம் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: 32 பேர் மீது வழக்குப்பதிவு: மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் டாபர் குழுமத்தின் இயக்குநர் கௌரவ் பர்மன், தலைவர் மோஹித் பர்மன் உள்பட 32 பேர்மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மோசடி மற்றும் சூதாட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காசா நகரம் ‘குழந்தைகளின் மயானம்’ ஆனது எப்படி?: கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை உலகில் நடந்த அத்தனை மோதல்களிலும் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, கடந்த அக்டோபரில் தொடங்கி இதுவரை காசாவில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். அதனால்தான் காசாவை ‘குழந்தைகளின் மயானம்’ என்று வேதனையுடன் அழைத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ். இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக, காசாவில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். . ஹமாஸ் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குழந்தைகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in