Published : 14 Nov 2023 01:10 PM
Last Updated : 14 Nov 2023 01:10 PM

கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள் | மேனாள் நீதிபதி கே.சந்துரு குழு அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

நீதிபதி கே.சந்துரு தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

சென்னை: கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (நவ.14) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்திறன்களை மேம்படுத்தும்பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டகுழு ஒன்று உருவாக்கப்படும் என்று 6.2.2023 அன்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும்விதமாக, கடந்த 11.04.2023 அன்று இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிட்டது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது கடந்த 2.5.2023 முதல் பொறுப்பேற்றதுடன் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டது. அதோடு மட்டுமல்லாது மேற்படி ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் நீதிபதியின் ஆய்வின் அடிப்படையில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு, இன்று தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் (பொறுப்பு) வே. அமுதவல்லி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு அவர்களின் மகள் சக்தி ஆகியோர் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x