Published : 12 Nov 2023 04:50 AM
Last Updated : 12 Nov 2023 04:50 AM

அனைவரது வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும்: ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

சென்னை: தீபாவளித் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அல்லது ‘வசுதெய்வ குடும்பகம்’ என்ற நமது சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது.

உள்ளூர் தயாரிப்புகள்: ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் ‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க’ வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்கி பயன்படுத்த இந்நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். ஒளியின் திருநாளான தீபாவளித் திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சாதி, மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மக்கள் கொண்டாடும் சிறப்பு மிக்க பண்டிகையாம்தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனதுஉளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள். இந்நாளில் அனைவரது துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உலகில் மண்டிக் கிடக்கும் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மோடி ஆட்சியின் 10 ஆண்டு கால இன்னல்கள் முடிவுக்கு வர இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாடே இருக்கும் நிலையில் இந்த தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும். அடுத்த ஆண்டு மலரப்போகும் நல்லாட்சிக்கான கொண்டாட்டமாக இந்த தீபாவளி அமையட்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: வாழ்வின் துன்பஇருள் நீக்கி, நம்பிக்கை விளக்கேற்றி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் மகிழ்ச்சித் திருவிழா தீபாவளி. இந்த நன்னாளில் தமிழக மக்களும், நம் பாரதத் திருநாட்டின் பிற மாநில சகோதர சகோதரிகளும், இந்தத் தீபத்திருநாளில் ஒளிமயமான வாழ்வையும், அதில் எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ்க என்று என் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்றுகூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் என்பது அவசியமாகும். வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாக கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங் கனிந்த தீபஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும். ஐப்பசி யின் மழைப்பொழிவில் அகமெல் லாம் மலரட்டும். ஆகாயம் பார்த்திருக்கும் அருமைநிலம் செழிக் கட்டும். தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும்.

ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: இருள் அகன்று, ஒளி பிறக்கும் நாளாய், தீமைகள் அகன்று,நன்மைகள் சிறக்கும் நன்நாளாய் கொண்டாடப்படும் தீபத் திரு நாளில், நம் நாட்டில் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இனிவரும் காலம் அனைவருக்கும் வசந்த காலமாகவே அமையும். அனைவரது இல்லத் திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருக தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சாதி, மத பாகுபாடுகளைக் கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்றும் ஒளியாக இந்த தீபாவளி திருநாள் அமைய நல்வாழ்த்துகள்.

ஐயுஎம்எல் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: தீபஒளிதிருநாள் மனிதநேயத்தை வளர்க்கும் மனவெளிச்சத்தை தரும் விழாவாக ஆசிப்போம். எல்லோரையும் ஒருதாய் மக்களாக நேசிப் போம். தீபஒளி திருநாளை கொண் டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

வி.கே.சசிகலா: தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், விஜய் வசந்த், சமக தலைவர் சரத்குமார்,பாமக தலைவர் அன்புமணி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்,அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் மு.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x