Published : 12 Nov 2023 05:12 AM
Last Updated : 12 Nov 2023 05:12 AM

தீபாவளியையொட்டி அரசு பேருந்துகளில் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்

கோப்புப்படம்

சென்னை: தீபாவளியையொட்டி அரசு பேருந்துகளில் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர்களுக்குப் பயணம் செய்தனர்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில், நேற்று மாலை வரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் பயணித்திருந்தனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், முன்பதிவில்லாத பேருந்துகளை போதிய அளவில் இயக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

குறிப்பாக அரியலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட நேரம் காத்திருந்து பயணித்தனர். இதேபோல் பிற தற்காலிக நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விவரம் தெரியாமல் கோயம்பேட்டில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து நெரிசல்: சிறப்புப் பேருந்துகள் மற்றும் சொந்தவாகனங்களில் ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை கோயம்பேடு பேருந்து முனையம், ஆம்னி பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் பேருந்து நிலையம், தாம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆய்வு செய்தார்.

சென்னையின் சுற்றுப்புற மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் நேற்று அதிகளவில் பயணம் மேற்கொண்டனர். இதனால் புறநகர் பகுதிகளில் நேற்றும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே சார்பில் வந்தே பாரத்உட்பட சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டிருந்தன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நேற்றும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. எழும்பூரில் பல்லவன் உள்ளிட்ட ரயில்களில் பயணிக்க ஏராளமானோர் குவிந்தனர்.

கடந்த 3 நாட்களில் ரயில்களில் 4 லட்சம் பேர், அரசு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1.50 லட்சம் என 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

ஊர் திரும்ப பேருந்துகள்: தீபாவளிக்காக சென்றவர்கள் ஊர் திரும் பும் வகையில் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னைக்கு 3,167 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x