Published : 10 Nov 2023 03:21 PM
Last Updated : 10 Nov 2023 03:21 PM

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 10% போனஸ்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும், இவ்வரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பருவத்துக்கும் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு விலைக்கு மேல் கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதல்வர் 2022-23 அரவைப் பருவத்துக்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 விகிதம் வழங்குவதற்கு ஏதுவாக மொத்தம் ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு கனிசமாக அதிகரித்ததுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் உயர்ந்து வருகிறது.

மேலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி – II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 6103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.415.30 லட்சங்கள் செலவினம் ஏற்படும். இதன் மூலம் அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர்வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்து கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு உதவும் சூழ்நிலை உருவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x