Published : 09 Nov 2023 11:59 AM
Last Updated : 09 Nov 2023 11:59 AM

சென்னை | மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிந்ததும் ஜனவரி மாதம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்தச் சூழலில், மண்டல வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை ஆணையர் தர்மேந்திர ஷர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x