Published : 04 Jan 2018 09:27 PM
Last Updated : 04 Jan 2018 09:27 PM

மனநல மருத்துவ திட்டத்தை தமிழக சுகாதாரத் துறையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்: வாசன்

மனநல மருத்துவ திட்டத்தை தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, தமிழக சுகாதாரத் துறையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் 32 மாவட்டங்களில் மனநல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மனநலம் பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், சிகிச்சை அளித்தல், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுதல் போன்ற பணிகளை மாவட்ட மனநல காப்பகங்கள் செய்து வருகின்றன. ஆள் பற்றாக்குறை, நிதி பயன்பாட்டில் உள்ள அதீத கட்டுப்பாடுகள் போன்ற காரணங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சில இடையூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மனநல மருத்துவ திட்டத்தை தமிழக அரசு தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும். மனநல மருத்துவ சேவை தனியார் வசம் சென்றால் ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே, நிர்வாக சிரமங்களை காட்டிலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மனநல மருத்துவ திட்டத்தை தமிழக சுகாதாரத் துறையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x