Published : 11 Jan 2018 11:04 AM
Last Updated : 11 Jan 2018 11:04 AM

தனி ஆராய்ச்சி மையமாக மகேந்திரகிரி; குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்பதால் மகேந்திரகிரி ஆய்வு மையத்தை தனி ஆராய்ச்சி மையமாக அறிவிக்கவும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் கே.சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக தமிழர் ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே சிவன் நியமிக்கப்பட்டு  இருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் தாமதமாக இந்தப் பொறுப்பு அவரது கைகளில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் வல்லங்குமாரவிளை கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சிவன், கடந்த 1982-ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 35 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு பல்வேறு நிலைகளில் பங்களித்துள்ளார். ஜி.எஸ்.எல்.வி ஏவுகலம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அதிக முறை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததற்கும், ஒரே ஏவுகலத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் முக்கியப் பங்காற்றியவர் இவரே. இஸ்ரோவின் புதிய தலைவராக பதவியேற்கவிருக்கும் அவர் செய்து முடிக்க ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சாதனைத் திட்டங்களான மங்கள்யானும், சந்திரயானும் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் மதிப்பை தேடித் தந்துள்ளன. இவற்றின் அடுத்தடுத்த தலைமுறை விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். விண்வெளி ஆய்வுத் துறையில் அமெரிக்கா, ரஷ்யாவை தொட்டுவிடும் அளவுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வளர்ந்திருந்தாலும், அந்த நாடுகளின் வழித்தடத்தில் பயணிக்காமல், இதுவரை எந்த நாடும் செல்லாத புதிய தடத்தில் பயணம் செய்து புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் நாட்டின் முதன்மைத் துறையான விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. பருவம் தவறிய மழையும், வறட்சியும் விவசாயத்தை சாத்தியமற்றதாக மாற்றி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் புதுமையான தீர்வுகளை காண முடியுமா? என்பது குறித்த ஆராய்ச்சிகளை இஸ்ரோவின் புதிய தலைமை தொடங்க வேண்டும்.

ஜி.எஸ்.எல்.வியின் வெற்றிக்கு அடிப்படையான கிரையோஜெனிக் எந்திரத்தை தயாரித்ததில் முக்கியப் பங்கு வகித்தது நெல்லை மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்கு அம்மையத்தின் விரிவாக்கம் மிகவும் அவசியமாகும். ஆனால், அம்மையம் கேரளத்தில் உள்ள வலியமலை திரவ இயக்க அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும், கடந்த காலங்களில் இஸ்ரோ தலைவர்களாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகேந்திரகிரி மையத்தின் வளர்ச்சியை விரும்பாததாலும் அதன் விரிவாக்கம் தொடர்ந்து   தடைபட்டு வருகிறது. அதேபோல், இந்தியாவின் மூன்றாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாக ஏற்கப்படவில்லை.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்பதால் மகேந்திரகிரி ஆய்வு மையத்தை தனி ஆராய்ச்சி மையமாக அறிவிக்கவும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x