Published : 02 Jul 2014 11:02 AM
Last Updated : 02 Jul 2014 11:02 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: சிறப்பு மருத்துவ உதவி மையம்

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யவும் தொழிலாளர்களின் உறவினர் களுக்கு உதவி செய்யவும் 50 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ உதவி மையம் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் செயல்பட்டு வருகிறது.

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் மீட்கப்பட்ட தொழிலாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுவரப்படும் உடல்கள் மற்றும் கட்டிட விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுக்கு உணவு போன்ற உதவிகளைச் செய்ய சிறப்பு மருத்துவ உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு மையத்தில் காவல், மருத்துவம், வருவாய் ஆகிய துறைகளைச் சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை அமரர் ஊர்தியில் கொண்டு செல்வதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ உதவி குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் வேகமாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடல்களைப் பத்திரமாகக் கொண்டு செல்வதற்கு 100 பிளாஸ்டிக் பைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்ய 10 மருத் துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக 2 மருத்துவர்கள் மட்டும்தான் பரிசோதனையில் ஈடுபடுவார்கள். கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலத்திற்கு அரசு அமரர் ஊர்தியில் உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஊர்தியுடன் செல்ல ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற உறவினர்கள் தனிப் பேருந்து மூலம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x