எ.வ.வேலு இடங்களில் ஐடி ரெய்டு முதல் கனமழை எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.3, 2023

எ.வ.வேலு இடங்களில் ஐடி ரெய்டு முதல் கனமழை எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.3, 2023
Updated on
2 min read

அமைச்சர் எ.வ.வேலு வீடு, நிறுவனங்களில் ஐ.டி சோதனை: திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

25 கார் மற்றும் வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன், 75-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், கல்வி நிறுவன வளாகத்தில் காலை சுமார் 6 மணியளவில் நுழைந்தனர். பின்னர் அறக்கட்டளை அலுவலகம், பன்னாட்டு பள்ளி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீடு மற்றும் விருந்தினர் மாளிகை என 6 இடங்களில் சோதனையை தொடங்கினர்.

வரி ஏய்ப்பு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கணினிகளில் செய்யப்பட்டிருந்த பதிவேற்றம் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா வேலு, மகன் குமரன் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பா அல்லது வரி ஏய்ப்பா என்பது சோதனையின் முடிவில் தெரியவரும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

“பாஜகவின் அணிகளாக ஐடி, அமலாக்கத் துறை...” - உதயநிதி: "காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருக்கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என்று பல அணிகள் உள்ளன. அதுபோல பாஜகவின் ஒரு அணிதான் வருமான வரித் துறை. இந்தத் துறைகள் எல்லாலாம் பாஜகவினுடைய அணிகள்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐசிசி பகிர்ந்த சிறப்பு வீடியோ: உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ‘சாதனை மன்னன்’ மொகமது ஷமியை கொண்டாடும் விதமாக, அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழநி, மணிமுத்தாறு, கோவை மற்றும் திருச்சியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்களைக் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சனிக்கிழமை மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“காங்கிரஸ் இல்லாமல் மோடி பிரதமராகி இருக்க முடியாது”: “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, 70 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் நரேந்திர மோடி பிரதமராக ஆகி இருக்க முடியாது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிலளித்துள்ளார்.

உ.பி.யில் பிக்பாஸ் பிரபலத்துக்கு போலீஸ் வலை: உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் நடந்த பார்ட்டி ஒன்றில் பாம்புகளையும், அவற்றின் விஷத்தையும் போதைக்காகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர். புகாருடன் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட வீடியோவில் இருந்த எல்விஷ் யாதவ் என்ற பிக்பாஸ் ஓடிடி பிரபலத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

“சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கவில்லை” - அமித் ஷா: சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கவில்லை என்றும், அது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இங்கு மத மாற்றம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“மன்னிப்பீர், இது அரசியல் அல்ல”: துனீசிய டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜாபெர் மகளிர் டென்னில் சங்கத்தின் கான்கன் இறுதிப் போட்டியில் வென்ற நிலையில், அந்தப் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக வழங்குவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார். மேலும் மன்னித்துவிடுங்கள். இது அரசியல் பற்றிய செய்தி இல்லை. மனிதாபிமானம் பற்றியது என்றும் தெரிவித்தார்.

“இஸ்ரேல் ராணுவப் படையை பைகளில் திருப்பி அனுப்புவோம்”: காசாவை சூழ்ந்த இஸ்ரேல் ராணுவப் படை வீரர்களை பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ் அட்-டின் அல்-காசம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in