

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழநி, மணிமுத்தாறு, கோவை மற்றும் திருச்சியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்களைக் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் வடகிழக்கு பருவமழை அக்.21 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் நவ.3 முதல் நவ.6 முடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு வருகை புரிந்து வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
03.11.2023 முதல் 06.11.2023 முடிய கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களிடம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து காணொலி மூலமாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது. கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.