நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Published on

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், "உயர் நீதிமன்றத்தில் இருந்து பெற்ற அறிக்கையைத் தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து அறிக்கை ஏதும் கிடைக்கப்பெறவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், "மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்பவரை மட்டும் வழக்கில் சேர்த்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். விரிவான பின்புலத் தகவலுக்கு > தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம் செலவு ரூ.5.60 கோடி: பரிந்துரைகளை அரசு நிறைவேற்றுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in