

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும்தன்னை நீக்கியது செல்லாது எனஅறிவிக்கக்கோரி வி.கே.சசிகலாசென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சசிகலா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள்ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வி்ல் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் மற்றும் வழக்கறிஞர் பா.இளந்தமிழ் ஆர்வலன் ஆகியோர், ‘‘அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ், மதுசூதனன் போன்ற மூத்த தலைவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் பொதுச் செயலாளராக பதவி வகித்த தன்னை அப்பதவியில் இருந்து நீக்கியது செல்லாது.
அதற்கான நடைமுறை சட்டவிரோதமானது. அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் எந்த நோக்கத்துடன் விதிகளை உருவாக்கினாரோ அந்த விதிகளுக்குப் புறம்பானது. கட்சி விதிகளில் திடீரென, தங்களது இஷ்டத்துக்கு மாற்றம் செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஏனெனில் பொதுக்குழு உறுப்பினர்கள் தன்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்த நிலையில், அப்பதவி யில் இருந்து நீக்கியதன் மூலம் கட்சியின் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளது’’ என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூறுவதற்கு இது ஒன்றும் அரசியல் சாசனம் இல்லையே என்றும், நீங்கள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினரா என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு சசிகலா தரப்பில், தான் அதிமுகவின் நீண்ட காலஉறுப்பினர் என விளக்கமளிக் கப்பட்டது.
அதிமுக மற்றும் பொதுச் செயலாளர் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.