Published : 07 Jan 2018 10:23 AM
Last Updated : 07 Jan 2018 10:23 AM

போராட்டத்தின் தன்மையை நீதிமன்றம் உணரவில்லை: தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் - போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தொழிலாளர்கள் போராட்டத்தின் தன்மையை நீதிமன்றம் உணரவில்லை. எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தப்படி 2.57 மடங்கு உயர்வு கேட்டோம். ஆனால், 2.44 மடங்கு மட்டுமே அளிக்க முடியும் என நிர்வாகம் கூறி வருகிறது. 0.13 என்ற குறைந்த வித்தியாசத்தை நிர்வாகம் சரிசெய்ய முன்வராமல் அரசு தவறான வழிகளில் செல்வதைக் கண்டிக்கிறோம். தினமும் 2.5 கோடி பேர் பயணம் செய்யும் அரசு போக்குவரத்துத் துறை முக்கியமானது என்பதை அரசு உணர வேண்டும்.

சமீபகாலமாக நீதிமன்றங்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், செவிலியர்கள் என எந்தப் போராட்டமாக இருந்தாலும், போராட்டங்களின் தன்மையை உணராமல் அவர்களின் நிலைப்பாடுகளைப் பற்றி கேட்டறியாமல் ஒருதலைபட்சமாக போராட்டங்களைத் தடை செய்வதைக் கண்டிக்கிறோம்.

தற்போதும், போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் மட்டுமல்லாமல், ஓய்வூதிய காலப் பலன்கள் வழங்கப்படவில்லை, பி.எப் தொகையும் வழங்காமல் இருக்கும் நிர்வாகத்தை நீதிமன்றம் கண்டிக்காதது ஏன்? போதிய பயிற்சி, திறமை இல்லாத தற்காலிக பணியாளர்களைக் கொண்டு, அரசு பஸ்களை ஓட்டுவது பயணிகளின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும்.

வேலைநிறுத்தம் என்று செய்துவிட்டால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த நடவடிக்கை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கும் தெரியும்.

நீதிமன்றத்திலும் எங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்போம். அரசு பொறுப்பை தட்டிக் கழிக்காமல் முதலில் எங்களை அழைத்து பேச வேண்டும்.

கடந்த 2001-ல் இதுபோன்ற போராட்டம் நடந்தபோது, நீதிமன்றம் தடை விதித்திருந்தது. எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களை மீறி தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடந்தது. இதனால், 25,000 பேர் ஒரு மாதம் சிறையில் இருந்தார்கள். அதையும் தற்போது நினைவூட்டுகிறோம். எனவே, எங்களது பிரச்சினை தீராத வரையில், பணிக்குத் திரும்பமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், சென்னையில் உள்ள தொமுச அலுவலகத்தில் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதுதொடர்பாக மு.சண்முகம் (தொமுச), ஜி.சுகுமாறன் (சிஐடியு) உட்பட 16 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 2.57 ஊதிய உயர்வு வழங்க போக்குவரத்துக் கழக நிர்வாகம் திரும்ப பேச்சுவார்த்தையைத் தொடர நடவடிக்கை எடுத்து தீர்வு காண முதல்வரே நேரடியாக தலையிட வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு நீதி கோரியும் அனைத்து உழைக்கும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாளை (ஜன. 8-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x